கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெற வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள்: இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும்; மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் அறிவிப்பு
சென்னை: கணக்கீட்டு படிவங்களை திரும்ப பெற, அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளில் இன்று வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெ.குமரகுருபரன் அறிவித்துள்ளார். சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின் படி, பொதுத் தேர்தல்களுக்கான சிறப்பு தீவிர திருத்தம்-2026 பணிகள் சென்னை மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர். இந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு தீர்வு காணும் வகையிலும், வாக்காளர்கள் மற்றும் அவர்களது உறவினர் பெயர்கள் 2005ம் ஆண்டின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்ற விவரங்களை கண்டறியவும், வாக்காளர்களுக்கு உதவும் வகையிலும், கடந்த 18ம்தேதி முதல் 25ம்தேதி வரை 8 நாட்களுக்கு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்களிலும், வாக்காளர் உதவி மையங்கள் அமைத்து பெரும்பாலான கணக்கீட்டுப் படிவங்கள் பெறப்பட்டது.
மேலும், பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெற குறைந்த நாட்களே உள்ள நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம்-2026ன் பணிகளின் ஒரு சிறப்பு நடவடிக்கையாக வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை மீளப் பெறும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து (947) வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் அதிக வாக்காளர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் பன்முக வளாகக் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வாக்காளர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவம் பெறுவதற்கான வாக்காளர் சிறப்பு உதவி மையங்கள் இன்று (29ம்தேதி) காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். எனவே, வாக்காளர்கள் இந்த சிறப்பு வாக்காளர் உதவி மையத்தை பயன்படுத்தி பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தினை விரைந்து வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

