பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு: கோதுமை கொள்முதல் விலை ரூ.2,585ஆக உயர்வு; 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் தொடங்க அனுமதி
புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில், ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, ஒன்றிய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி 58 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வை கடந்த ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு கணக்கிட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமார் 49.19 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 1.15 கோடி ஊழியர்கள் பயனடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10,083.96 கோடி கூடுதல் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பருப்பு உற்பத்திக்கு ரூ.11,440 கோடி: பருப்பு உற்பத்தியில் நாடு தன்னிறைவு பெறும் வகையில், 2030-31ம் ஆண்டுக்குள், உற்பத்தியை 350 லட்சம் டன்களாக உயர்த்தும் திட்டத்துக்கும் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.11,440 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கோதுமை கொள்முதல் விலை உயர்வு: 2026-27 ஆம் ஆண்டிற்கான கோதுமை குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.160 உயர்த்தி ரூ.2,585 ஆக அதிகரிக்க ஒன்றிய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. 57 புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்: நாடு முழுவதும் புதிதாக 57 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தொடங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதில் 19 பள்ளிகள் தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உருவாக்கப்படும் 57 பள்ளிகள் மூலம் 86,640 மாணவர்கள் பயனடைவார்கள். மேலும் 4,617 பேருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.
அசாமில் ரூ.6,957 கோடியில் சாலை: அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள அசாம் மாநிலத்தில் என்எச் 715 சாலையான கலியாபோர்- நூமாலிகர் சாலையை ரூ.6,957 கோடி மதிப்பில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
* வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழா
‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டை, நாடு முழுதும் கொண்டாட ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. சுதந்திர போராட்டத்தின்போது, முக்கிய பங்கு வகித்த ‘வந்தே மாதரம்’ பாடலை கருத்தில் கொண்டு, இந்த பாடலின் 150வது ஆண்டை குறிக்கும் வகையில், நாடு தழுவிய கொண்டாட்டங்கள் நடத்த முடிவு எடுக்கப்பட்டது. பங்கிம்சந்திர சட்டர்ஜி இயற்றிய ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு தேசியப் பாடலின் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. ‘இந்தியா.கோவ்’ போர்ட்டலின்படி, வந்தே மாதரம் சமஸ்கிருதத்தில் சட்டர்ஜியால் இயற்றப்பட்டது. இது தேசிய கீதமான ஜன-கண-மன பாடலுக்கு சமமான அந்தஸ்தைக் கொண்டுள்ளது.