Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

முட்டைகோஸ் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி

*விவசாயிகள் கவலை

கோத்தகிரி : கோத்தகிரி காய்கறி மண்டிகளில் முட்டைகோஸ் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலைக் காய்கறியான கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிபிளவர், பீன்ஸ், முள்ளங்கி உள்ளிட்ட மலை காய்கறிகளும், சல்லாரை, சுகுனி, புரூக்கோலி, ஐஸ்பெர்க் போன்ற இங்கிலீஷ் காய்கறிகளும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கோத்தகிரி அருகே உள்ள ஈளாடா, கதவுத்தொரை, கட்டபெட்டு, குடுமனை, காக்காசோலை, குருக்குத்தி, நெடுகுளா உள்ளிட்ட பகுதிகளில் முட்டைகோஸ் அதிகளவில் பயிரிடப்பட்டு இருந்தது.

ஆனால் தற்போது முட்டைகோஸ் அறுவடைக்கு தயாராகி உள்ள நிலையில் கோத்தகிரி காய்கறி மண்டிகளில் கொள்முதல் விலை கடும் வீழ்ச்சியடைந்து கடந்த சில தினங்களுக்கு முன் கிலோ 8 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது. இதனால் அதை பயிரிட்ட விவசாயிகள் தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், கவலையடைந்து உள்ளனர்.இதுகுறித்து கட்டபெட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:

விதை, உரம் மற்றும் இடுபொருட்கள் விலையேற்றம், தொழிலாளர்கள் பற்றாக்குறை, வனவிலங்குகள் தொல்லை உள்ளிட்ட இன்னல்களை எதிர்கொண்டு வங்கிக்கடன் பெற்று விவசாயம் செய்து வருகிறோம். முட்டைகோஸ் கிலோ ஒன்றுக்கு 15 ரூபாய்க்கு மேல் கொள்முதல் விலை கிடைத்தால் மட்டுமே விவசாயிகளுக்கு ஓரளவிற்கு கட்டுப்படியாகும்.

ஒரு கிலோ முட்டைகோஸ் விளைவிக்க 6 ரூபாய் வரை செலவாகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.15 வரை கிடைத்து வந்தது. ஆனால் தற்போது கிலோவுக்கு 8 ரூபாய்க்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்படும்.

மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளில் கிலோவுக்கு 15 ரூபாய் வரை முட்டைகோஸ் கொள்முதல் செய்யப்பட்டாலும், முட்டைகோஸ்களை அறுவடை செய்து மேட்டுப்பாளையம் காய்கறி மண்டிகளுக்கு கொண்டு செல்லும் போக்குவரத்து செலவுக்கு கூட வருமானம் இருக்காது என்பதால் அறுவடை செய்யாமலேயே விட்டுள்ளோம்.

கொள்முதல் விலை உயரும் வரை அறுவடைக்கு தயாரான முட்டைகோஸ் பயிரை அறுவடை செய்யாமல் விட்டால் பயிர்களில் அழுகல்நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. ஒரு சில விவசாயிகள் அறுவடை செய்து மேட்டுப்பாளையம் கொண்டு சென்று குளிர்பதன கிடங்கில் வைத்து கொள்முதல் விலை உயரும்போது விற்பனை செய்ய கொண்டு செல்கின்றனர்.

அதற்கான கட்டணமும் செலுத்த வேண்டி உள்ளதால் முட்டைகோஸ் பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.