வாங்கய்யானு போன சி.வி.சண்முகம்; போங்கய்யானு அனுப்பிய ராமதாஸ்... கூட்டணிக்கான தூது ‘புஸ்’ இலவுகாத்த கிளியான பாஜ: பாமகவை இழுக்க முடியாமல் அப்செட்டில் அதிமுக டெல்லி மேலிடம்
விழுப்புரம்: தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்க அதிமுக, பாஜ அனுப்பிய சி.வி.சண்முகத்தின் ரகசிய கூட்டணி தூது தோல்வியில் முடிந்துள்ளது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நெருங்கும் நிலையில் கூட்டணியை உறுதி செய்வதில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. வட மாவட்டங்களில் வாக்கு வங்கியை வைத்துள்ள பாமக பிளவுபட்டு கிடந்தாலும் ராமதாசை தங்கள் அணிக்கு இழுக்க பாஜவும், அதிமுகவும் முனைப்பு காட்டுகின்றன. ஏற்கனவே அன்புமணி பாஜவுக்கு ஆதரவாக உள்ளதால் தந்தையையும் இழுத்து விட்டால் கட்சி பிளவுபட்டாலும் ஓட்டுகள் சிதறாது என்ற கணிப்புதான் முக்கிய காரணம். இதனால் தேர்தல் ஆணையத்தை காரணமாக வைத்து திரைமறைவு பேச்சுகளை பாஜவும், அதிமுகவும் சென்னையில் அவ்வப்போது நடத்தி வருவகின்றன.
இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்தாலும் தந்தை, மகன் மோதல் முடியாது என்பதால், கூட்டணிக்கு இலவுகாத்த கிளியாக இருந்த பாஜ, அதிமுக தலைமைகள் ராமதாசை மீண்டும் சமரசம் செய்து தங்கள் பக்கம் இழுப்பதற்கான அடுத்தகட்ட முயற்சியில் இறங்கின. ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா இருமுறை தமிழகம் வந்து சென்று திரும்பிய நிலையில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா விரைவில் தமிழகம் வர உள்ளதால் அதற்குள் எப்படியாவது ராமதாசை சமாதானப்படுத்தி விட வேண்டுமென அக்கட்சிகள் கருதின.
இதற்காக அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தனது கட்சியின் முன்னாள் அமைச்சரான சி.வி. சண்முகம் மூலம் தூது அனுப்ப முடிவெடுத்தார். பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரனும் சி.வி.சண்முகத்தை திண்டிவனத்தில் சந்தித்து, ராமதாசை தேஜ கூட்டணிக்கு கொண்டு வருவதற்கான சில ஆலோசனைகளை வழங்கி அசைன்மென்ட் கொடுத்துவிட்டு சென்றாராம். அதன்படி ராமதாசை சந்திக்க காரணம் தேடிய சி.வி.சண்முகம், தனது சகோதரர் மகன் திருமணம் விவகாரத்தை கையில் எடுத்தாராம். இதற்கான அழைப்பிதழுடன் கடந்த 29ம் தேதி தைலாபுரம் நுழைந்த சி.வி.சண்முகம், சுமார் அரைமணி நேரம் ராமதாசிடம் பேச்சுவார்த்தை நடத்தினாராம். அதாவது வருகிற 23ம் தேதி நடைபெறும் திருமணத்திற்கு முன்கூட்டியே அழைப்பிதழை கொடுக்கச் சென்றதன் பின்னணியில் கூட்டணி அரசியல் இருப்பதாக தைலாபுரம் வட்டாரத்தில் தகவல் கசிகிறதாம்.
இதுகுறித்து பாமக வட்டாரத்தில் விசாரித்தபோது, தமிழகத்திற்கு கூட்டணியை இறுதிசெய்ய மோடி, அமித்ஷா உத்தரவின்பேரில் பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா விரைவில் வரவுள்ளார். அதற்குள் இவர்களின் பிரச்னையை பேசி முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற திட்டத்தை நிறைவேற்ற தைலாபுரம் வந்த சி.வி.சண்முகம், கூட்டணிக்கு வாருங்கள்... கட்சி பிரச்னைகளை நாங்கள் சரி செய்கிறோம்... சின்னமும், அங்கீகாரமும் கிடைக்க பாஜ, அதிமுக பக்கபலமாக இருக்கும் என மேலிடம் கூறியதாக தெரிவித்தாராம். ஆனால் பாமக நிறுவனரோ கூலாக, இது எங்கள் கட்சி விவகாரம்... நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்... கூட்டணி குறித்த முடிவை பிறகு பார்த்துக் கொள்ளலாம்... என்று கொஞ்சம்கூட முகம் சுளிக்காமல் சிரித்தபடியே பேசி அனுப்பி விட்டாராம். இதனால் தூது அனுப்பிய பாஜ, அதிமுக தலைமைகள் கடும் அப்செட்டில் உள்ளதாம்.
அத்தோடு பாமக தனது அதிருப்தியை கொட்டித் தீர்த்ததாம். தூது அனுப்புவதற்கு வேற ஆளே இல்லையா? என்ற கேள்வியை எழுப்பியதோடு, பாமகவிற்கு தேசியமும் இல்ல... தமிழும் இல்ல... வெறும் குடும்பம் தான்... டப்புதான் வேறொன்றும் அவர்களுக்கு முக்கியம் இல்லை என்று கடந்த தேர்தலின்போது மிகவும் கொச்சையாக விமர்சித்து பேசியவரை அனுப்பினால் நியாயமா? என்ற பதிலடியை திரைமறைவாக கொடுத்து வருகிறார்களாம். கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது சி.வி.சண்முகம் இதேபோல் அதிமுகவுடன் கூட்டணிக்கு ராமதாசை அழைக்க தூதுபோய் தோல்வியில் முடிந்ததையும் நினைவுபடுத்தி உள்ளார்களாம். இதனால் பாஜ, அதிமுக தலைமை, மாற்று தூதுவரை அனுப்புவது குறித்து ஆலோசித்து வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.