புதுடெல்லி: நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். அதைத் தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை அவர் நேற்று ராஜினாமா செய்தார். துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி பதவி விலகினார். இதைத் தொடர்ந்து, அடுத்த துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 9ம் தேதி நடந்தது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் (67), இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் போட்டியிட்ட சுதர்சன் ரெட்டியை விட 152 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இதையடுத்து, நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பதவியேற்க உள்ளார். இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா ஆளுநர் பதவியை சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று ராஜினாமா செய்தார். இதனால், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத்திற்கு கூடுதல் பொறுப்பாக மகாராஷ்டிரா ஆளுநர் பணிகளை ஒதுக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் பதவியேற்பு நிகழ்ச்சியில் புதிய துணை ஜனாதிபதியாக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்க உள்ளார். அவருக்கு ஜனாதிபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். இவ்விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.