Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விளவங்கோடு இடைத்தேர்தல் விறுவிறுப்பான வாக்குப்பதிவு: 2 ஓட்டு போட்ட வாக்காளர்கள்

நாகர்கோவில்: விளவங்கோடு இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. இந்த தொகுதி வாக்காளர்கள் கன்னியகுமாரி மக்களவை தொகுதிக்கு சேர்த்து 2 வாக்குகளை பதிவு செய்தனர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயதரணி தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து கன்னியாகுமரி மக்களவை தேர்தலுடன் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு நேற்று இடைத்தேர்தலும் நடந்தது.

இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட், அதிமுக சார்பில் ராணி, பா.ஜ சார்பில் நந்தினி உட்பட 10 பேர் களத்தில் உள்ளனர். இந்த தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 876 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 19 ஆயிரத்து 862 பெண் வாக்காளர்களும், 3 இதர வாக்காளர்களும் என்று மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 741 வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இடைத்தேர்தலுக்காக 272 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டன. சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு ஒரு இயந்திரமும், மக்களவை தேர்தலில் 22 வேட்பாளர்கள் களத்தில் நிற்பதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொருவரும் இரண்டு வாக்குகளை பதிவு செய்தனர். மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மலையாள மொழி பேசும் வாக்காளர்கள் வசித்து வருவதால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர் பெயர், சின்னம் விபரங்கள் தமிழ் மற்றும் மலையாளத்தில் இடம் பெற்றிருந்தன.

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடந்தது. 10 மணி நிலவரப்படி 10.64 சதவீதமும், 11 மணிக்கு 22.17 சதவீதமும், மதியம் 1 மணிக்கு 34.39 சதவீதமும், மாலை 3 மணிக்கு 45.27 சதவீதமும், 6 மணிக்கு 65.40 சதவீதமும் வாக்குகள் பதிவாகி இருந்தது.