Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

தரவுகள் அழிக்கப்படாமல் ரகசியங்களை அறியவாய்ப்பு; பழைய செல்போனை வாங்குவதும் விற்பதும் அபத்தங்களை உருவாக்கும்: அறிமுகமான நபர்களிடம் வாங்கினால் நல்லது

* அவசரத்தில் எதையும் செய்ய வேண்டாம்

“நல்ல ஆபர் வருது... பழைய செல்போனை கொடுத்துட்டு புதுசா வாங்கலாமா? பழைய போனுக்கு யாரு நல்ல விலை கொடுப்பாங்க? என்று ஒருவர் உங்களிடம் கேட்டால், நீங்கள் பலவிதமான யோசனைகளை முன்வைக்கலாம். ஆனால் உண்மையில் பழைய செல்ேபானை ஒரு நல்ல சுத்தியலை எடுத்து நாலாக உடைத்து, ஆழமாக குழித் தோண்டி புதைத்து விடுவதுதான் ஆகச் சிறந்த யோசனையாக இருக்க முடியும் என்கின்றனர் சைபர் பாதுகாப்புத் துறை சார்ந்த வல்லுநர்கள். ‘‘தொழில்நுட்ப வசதி ஒரு பயனுள்ள வேலைக்காரனாக இருக்கலாம். ஆனால், அதுவே சில நேரம் ஓர் ஆபத்தான எஜமானனாகவும் மாறிவிடும்,’’ என்பது நார்வேயைச் சேர்ந்த நோபல் பரிசு வென்ற வரலாற்று ஆய்வாளர் கிறிஸ்டியன் லான்கேவின் தொழில்நுட்பம் சார்ந்த கூற்று.

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு மட்டும் 2 கோடிக்கும் அதிகமான பழைய மொபைல்கள் விற்கப்பட்டதாக இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கிறது. 10 கோடிக்கும் அதிகமான பழைய மொபைல்கள் வீட்டின் அலமாரியிலோ குப்பைக் கூளங்களிலோ கிடக்கலாம் என்றும் அந்தத் தரவு மதிப்பிடுகிறது. பழைய மொபைல் சந்தையில் 2026க்குள் சுமார் 25 கோடி பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்கள் புழங்கும் என்றும் இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சங்கம் கணித்துள்ளது. இந்தநிலையில் தான் நாம் பயன்படுத்திய செல்ேபானை மற்றவர்களுக்கு விற்கலாமா? என்ற கேள்வியோடு அது சார்ந்த அபத்தங்களும் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து ஸ்மார்ட் போன் தொழில் நுட்ப வல்லுநர்கள் குழுவினர் கூறியதாவது: தொலைபேசி எண்கள், வங்கித் தரவுகள், பாஸ்வேர்ட், புகைப்படங்கள், வீடியோக்கள், சேட்டிங், பிரவுசிங் ஹிஸ்டரி என்ற எது குறித்தும் உங்களுக்குக் கவலையில்லை என நினைத்தால் நீங்கள் உங்கள் பழைய மொபைலை விற்கலாம். இல்லாவிட்டால் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்மார்ட் போனில் தரவுகள் அழிந்துவிட்டால் அதை எடுப்பது கடினமான காரியமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படியல்ல. உங்கள் செல்போன் பாதுகாப்பு நிறைந்த ஆப்பிள் ஐபோனாக இருந்தாலும் சரி, அல்லது ஆண்ட்ராய்ட் என்றாலும் சரி, மிக எளிதாகவே தரவுகளை மீட்டுவிட முடியும். யார் வேண்டுமென்றாலும் இதைச் செய்யலாம். மாதக் கட்டணமாக 50 அமெரிக்க டாலர்கள் பணம் செலுத்தினால் அதற்கென பிரத்யேக செயலிகள் கிடைக்கின்றன.

அதன் உதவியுடன் தரவுகளை மீட்க முடியும். இதுவே உங்களது முழுமையான விவரங்கள் மட்டுமின்றி ரகசியங்களையும் அடுத்தவருக்கு வலியச்சென்று கொடுப்பதற்கு சமமானது. எதுவுமே அழிக்கப்படவில்லை. சிறு குறு வியாபாரிகளைப் பொருத்தவரை, தங்களுக்குக் கிடைக்கும் பயன்படுத்தப்பட்ட ஸ்மார்ட் போன்களை எப்படி விரைவாக விற்று பணம் சம்பாதிக்கலாம் என யோசிப்பார்களே தவிர, அதில் உள்ள தரவுகள் முறையாக அழிக்கப்பட்டிருக்கிறதா என்று யாரும் கவனிப்பதில்லை.இதனால் தவறான நோக்கத்திற்காக பழைய மொபைலில் உள்ள தரவுகளை எடுத்து அச்சுறுத்தவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதேபோல் சாலை விபத்து அல்லது தீ விபத்து போன்றவற்றால் மொபைல் போன்கள் சேதமடைந்தாலும்கூட தரவுகளை எளிதாக எடுத்துவிட முடியும். பெண்களைக் குறிவைத்து சில நேரங்களில் விற்கப்படும் பழைய ஸ்மார்ட் போன்களில், முன்பக்க கேமராவை பயன்படுத்தும் மால்வேர்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். எனவே முன்பின் தெரியாதவர்களிடம் உங்கள் மொபைலை விற்பது அல்லது வாங்குவதற்கு முன்பு நன்கு ஆலோசிப்பது சிறந்தது.

உதாரணமாக நம்மிடம் 16 ஜிபி மெமரி கார்ட் இருப்பதாக வைத்துக் கொள்வோம். அதில் முழுக்க தனிப்பட்ட புகைப்படங்களும் வீடியோக்களும் நிரம்பியுள்ளன. தரவுகளும் ஒரு இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும். அதை நீங்கள் அழித்துவிட்டால், மெமரி கார்டின் வெளித்தோற்றத்தில் தரவுகள் அழிந்துவிடும். ஆனால் மீண்டும் எடுத்துவிட முடியும். தரவுகளை அழித்த கையோடு, அதே இடத்தில் தேவையில்லாத தரவுகளை மீண்டும் நிரப்ப வேண்டும். இப்போது பழைய தரவுகள் இருந்த இடத்தைப் புதிய தரவுகள் ஆக்கிரமித்துக் கொள்ளும். இப்படிச் செய்யும் பட்சத்தில் நீங்கள் அழிக்க வேண்டிய தரவுகளை ஓரளவு பாதுகாப்பாக அழித்துவிட முடியும். எனவே ஸ்மார்ட் போன் அல்லது கேட்ஜட்டில் ‘முக்கியமான’ தரவுகள் எதுவும் இல்லை என்று 100சதவீதம் நம்பினால் மட்டுமே பழையதை விற்க ேவண்டும். இல்லாவிட்டால் அதை நம்முடன் வைத்துக் கொள்வதே சிறந்தது. இவ்வாறு தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறினர்.

எக்சேஞ்ச் ஆபர் வியாபார யுக்தி

‘‘பண்டிகைக் காலங்களில் எக்சேஞ்ச் ஆபரில் புதிய மொபைல் தருவதாகச் சொல்வதும் ஒரு விளம்பர உத்தி. உங்கள் மொபைலை அவர்கள் குறைந்த விலைக்கு வாங்க இரண்டு காரணம். ஒன்று அதைப் புதுப்பித்து மீண்டும் சந்தையில் விற்பது. அல்லது அதில் உள்ள நல்ல பாகங்களை மட்டும் சேகரித்து அதைப் பயன்படுத்திக் கொள்வது. இரண்டுமே அவர்களுக்கு நல்ல லாபம் தரும். அதைச் சாதகமாக்கிக் கொண்டு அவர்கள் புதிய மொபைலை ஆபரில் தருவதாகச் சொல்வார்கள். ஆனால் இது உத்தியே அன்றி வேறில்லை. பழைய மொபைலை வாங்கி விற்பதற்கும், அதற்கு மாற்றாக புதிய மொபைலை வழங்குவதற்கும் பல நிறுவனங்கள் உள்ளன. பழைய மொபைல் போனை நேரடியாக வாங்கும் நிறுவனங்கள், பரிசோதனை ஆப் ஒன்றைப் பயன்படுத்துகின்றன. இதைக் கொண்டு நீங்கள் பயன்படுத்திய மொபைலில் உள்ள தரவுகளை அழிப்பதோடு மொபைலின் திறனும் பரிசோதிக்கப்பட்டு அதன் செயல்பாட்டிற்கேற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது’’ என்பதும் தொழில்நுட்ப குழுவினர் தெரிவித்துள்ள தகவல்.

பழைய உரிமையாளர் பின்னணி முக்கியம்

பழைய மொபைல், முறையாக இயங்குகிறதா என்பதை பரிசோதிப்பதைத் தாண்டி அதன் முன்னாள் உரிமையாளர் முறையாக அந்த மொபைலை பயன்படுத்தினாரா என்பதையும் கவனித்துக் கொள்ள வேண்டும். அதாவது அவரது மொபைல் எந்தவித குற்றச் சம்பவங்களிலும் தொடர்பற்றவை என்பதை உறுதிபடுத்துவதும் நல்லது. இதை உறுதிப்படுத்த, நம்பகமான நபர்களிடம் அல்லது கடைகளிடம் இருந்து மட்டுமே மொபைலை வாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். எந்த ஒரு நபரிடம் இருந்தோ, கடையில் இருந்தோ பழைய மொபைல்போனை வாங்கும்போது அதன் ஐஎம்இஐ எண், மொபைல் வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட முக்கிய அம்சங்களைப் பரிசோதித்துக் கொள்வது சிறந்தது. கூடுதலாக தேவையற்ற செயலிகள் ஏதேனும் உள்ளனவா, பேட்டரி, டிஸ்ப்ளே உள்ளிட்ட அம்சங்கள் சரியாக வேலை செய்கின்றனவா என்பதையும் பரிசோதிக்க வேண்டும் என்கின்றனர் தகவல் தொழில்நுட்பத்துறை அனுபவசாலிகள்.