ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டை அருகே கொண்டாபுரம் பஸ் நிறுத்தத்தில் இன்று 20க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது, அங்குள்ள புதர் பகுதியில் இருந்து சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு ஊர்ந்து வந்தது. இதை பார்த்ததும், பஸ்சுக்காக காத்திருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இந்நிலையில், தகவலறிந்து பள்ளிப்பட்டு வனத்துறையினரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை தீயணைப்பு வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்து, கோணி பையில் கட்டி வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதை தொடர்ந்து, அந்த மலைப்பாம்பு அருகிலுள்ள காப்பு காட்டில் விடப்பட்டது.


