Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வணிகர்கள் மீது பொய்யான புனை வழக்குகள் பதிவு செய்வதை தடுக்க வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் விக்கிரமராஜா வலியுறுத்தல்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா, சென்னை போலீஸ் கமிஷனர் அருணை நேற்று நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ஒன்றிய, மாநில அரசுகளின் முறையான உரிமம் மற்றும் அனுமதி பெற்று அதற்குரிய ஜி.எஸ்.டி வரி செலுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை சில்லரை விற்பனை கடைகளில் சிறு, குறு வணிகர்கள் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்கள் மீது அண்மைக்காலமாக தொடர் அச்சுறுத்தல்கள், பீடி, சிகரெட் பறிமுதல்கள், சட்ட விதிகளுக்கு அப்பாற்பட்டு வழக்குகள் புனைதல் என காவல்துறையின் பலமுனை தாக்குதல் உள்ளது. இந்த வழக்குகள் கடுமையான சட்டப்பிரிவுகளுடன் மேற்கொள்ளப்படுவதால், சாமான்ய வணிகர்கள் எளிதில் முன்ஜாமீன் பெறவோ, மீண்டும் தங்களுடைய வணிகத்தை தொடர்ந்திடவோ இயலாத சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சிந்தாதிரிப்பேட்டையில் காவலர்கள் புகையிலைப் பொருட்களையே விற்காத வணிகர்கள் மீது அபாண்டமாக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்வதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புக்கு சிறு வணிகர்கள் புகார் அளித்து வருகிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வாதாரம் கருதி சொற்ப முதலீட்டில் 5 அடிக்கு 5அடி கடை வைத்து கணவன், மனைவி வணிகம் செய்து குடும்பத்தை நடத்தி வருகின்றனர். இவர்கள் மீது, இதுபோன்ற அத்துமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும். தேவை ஏற்பட்டால், தயாரிப்பு நிலையிலேயே அவற்றை கட்டுப்படுத்திடவோ அல்லது மொத்த விற்பனை செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகளை தடை செய்திடவோ நடவடிக்கை எடுத்து சாமான்ய வணிகர்களின் வாழ்வாதாரத்தை காத்திட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.