Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக புகார் பிரபல ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷ் கைது: அமித்ஷாவுடன் புகைப்படம் எடுத்து போலீசாரை மிரட்ட நினைத்தவர் சிக்கினார்

சென்னை: தொழிலதிபரை மிரட்டி பணம் கேட்டதாக அளித்த புகாரில், மாநில பாஜ ஓபிசி அணி செயலாளரும், பிரபல ரவுடியுமான கே.ஆர்.வெங்கடேஷை, போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செங்குன்றம் அருகே பாடியநல்லூர், பி.டி.மூர்த்தி நகர், வீரவாஞ்சிநாதன் தெருவை சேர்ந்தவர் கே.ஆர்.வெங்கடேஷ். தமிழக பாஜவில் மாநில ஓபிசி அணி செயலாளராக இருந்து வருகிறார். இவர் மீது ஆந்திரா, தெலங்கானாவில் செம்மர கடத்தல் வழக்குகள், ஆவடி காவல் ஆணையரகத்தில் பணமோசடி, துப்பாக்கி வைத்து மிரட்டியது உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

மேலும், கடந்த தேர்தல் நேரத்தில் பணப் பட்டுவாடா தொடர்பாக, இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்துள்ளாரா? என்று தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை நடத்தியுள்ளனர். பின்னர், சில மாதங்களுக்கு முன்னர் நிலமோசடி தொடர்பாக ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார், மிளகாய் பொடி வெங்கடேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால், ஜாமீனில் வெளியில் வந்த பிறகு வெங்கடேஷ் தொடர்ந்து மிரட்டல் மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், நேற்று காலை செங்குன்றம் உதவி ஆணையர் ராஜா ராபர்ட், எண்ணூர் உதவி ஆணையர் வீரக்குமார் தலைமையில், பாடியநல்லூரில் உள்ள கே.ஆர்.வெங்கடேஷ் வீட்டுக்கு போலீசார் விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருந்த கே.ஆர்.வெங்கடேஷை கைது செய்து ஜீப்பில் செங்குன்றம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஆவடி காவல் ஆணையரக அலுவலகத்தில் நேற்று முன்தினம் பேனாசோனிக் டீலர் தீபன் சக்கரவர்த்தி ஒரு புகார் அளித்தார்.

அதில், பேனாசோனிக் கம்பெனியின் டீலராக உள்ளேன். ரூ.50 லட்சம் அளவுக்கு கணபதிலால் என்பவருக்கு பொருட்கள் சப்ளை செய்தேன். அந்த பணத்தை அவர் கொடுக்கவில்லை. அதேபோல, கணபதிலாலுக்கு கோகுல்தாஸ் என்பவரும் பொருட்கள் சப்ளை செய்துள்ளார். அதற்கும் பணம் வரவில்லை. இருவரும் சேர்ந்து ரவுடி மிளகாய் பொடி வெங்கடேஷிடம் சென்று பணத்தை வாங்கித் தரும்படி கூறினோம். அவரும் பணம் வாங்கித் தருகிறேன். தனக்கு 10 சதவீதம் கமிஷன் தரவேண்டும் என்றார்.

நாங்களும் சம்மதித்து முதலில் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தோம். அதன்பின்னர், அவர் பணம் வாங்கித் தர எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நாங்கள் அவரிடம் செல்வதை நிறுத்திவிட்டோம். ஆனால் அவர் கணபதிலாலுடன் கூட்டுச் சேர்ந்து எங்களை மிரட்டி பணம் பறிக்க தொடங்கினார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார்.  இந்த, புகாரின்பேரில் பாஜ பிரமுகர் வெங்கடேஷை, போலீசார் நேற்று காலையில் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

அவரிடம் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மையில் மதுரைக்கு வந்திருந்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கே.ஆர்.வெங்கடேஷ் நேரில் சந்தித்து, அந்த புகைப்படங்களை பல்வேறு சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அதோடு ஆவடி போலீஸ், தமிழக காவல்துறை, ஆந்திரா, தெலங்கானா காவல்துறை ஆகியோரை டேக் செய்து டிவிட்டர் மெசேஜ் வெளியிட்டிருந்தார். வழக்குகள் உள்ள போலீசாரை டேக் செய்ததன் மூலம், அவர் மீதான வழக்குகளை மிரட்டி ஒன்றும் இல்லாமல் செய்வதற்கான மிரட்டல் என்றே போலீஸ் அதிகாரிகள் கருதினர். இதற்கிடையில் தற்போது, அவர் முறைகேடு புகாரில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.