செக் மோசடி வழக்கில் தொழிலதிபருக்கு சிறை தண்டனையை எதிர்த்த மேல்முறையீடு தள்ளுபடி: கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை: போரூரை சேர்ந்தவர் எம்.மணி. இவரும் அண்ணாநகரை சேர்ந்த பி.ஜானகிராமன் என்பவரும் சேர்ந்து திருப்பூரில் பண்ணாரியம்மன் ஏஜென்சிஸ் என்ற பெயரில் கடந்த 2013ல் ஒரு நிறுவனத்தை தொடங்கினர். விருதுநகர் மாவட்ட குல்லூர்சந்தை நீர்தேக்கத்திலிருந்து மீன்களை வாங்கி வணிகம் செய்வது தொடர்பாக மணி மற்றும் ஜானகிராமனுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன் அடிப்படையில் மணி ரூ.40 லட்சத்தை முதலீடு செய்துள்ளார். இந்த நிலையில், நிறுவனத்திலிருந்து தான் விலகுவதாக மணி தெரிவித்ததையடுத்து மணிக்கு ரூ.32 லட்சத்தை திரும்ப தருவதாக கூறிய ஜானகிராமன் முதல் கட்டமாக ரூ.17 லட்சத்தை கொடுத்துள்ளார். மீதமுள்ள ரூ.15 லட்சத்திற்கான செக்கையும் கொடுத்துள்ளார்.
அந்த செக்கை வங்கியில் டெபாசிட் செய்தபோது வங்கி கணக்கில் பணம் இல்லை என்று செக் திரும்ப வந்தது. ஜானகிராமனின் அறிவுறுத்தலின்படி தொடர்ந்து இருமுறை செக்கை டெபாசிட் செய்தும் பணம் இல்லாமல் செக் திரும்ப வந்தது. இதையடுத்து, ஜானகிராமனுக்கு மணி வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு உரிய பதில் இல்லாததால் ஜானகிராமன் மீது செக் மோசடி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் ஜானகிராமனுக்கு 8 மாதம் சிறை தண்டனை விதித்ததுடன் ரூ.15 லட்சத்தை இழப்பீடாக மனுதாரருக்கு தருமாறும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கு 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜானகிராமனின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.