தூத்துக்குடியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு ரூ.32,554 கோடி முதலீட்டிற்கு ஒப்பந்தம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
தூத்துக்குடி: தூத்துக்குடியில் நேற்று நடந்த ‘டிஎன் ரைசிங் 2025’ தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,554 கோடி மதிப்பில் 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும்விதமாக தொழில்கள் தொடங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. மேலும் 3,600 பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் ரூ.2,530 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தொழில் நிறுவனங்களை காணொலி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான இலக்கை நிர்ணயித்து திராவிட மாடல் ஆட்சியில் அதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதன் ஒருபடியாக, தூத்துக்குடி மாணிக்கம் மகாலில் ‘டிஎன் ரைசிங் 2025’ என்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்தது. தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா வரவேற்றார். அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கனிமொழி எம்.பி., தலைமைச் செயலாளர் முருகானந்தம், கூடுதல் தலைமை செயலாளர் அதுல் ஆனந்த், மேலாண்மை இயக்குநர் தாரேஸ் அகமது, கலெக்டர் இளம் பவகத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் நெல்லை கங்கைகொண்டானில் ரூ.330 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பிரிட்டானியா பிஸ்கட் நிறுவனம், ரூ.200 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நந்தாதேவி பயோ எனர்ஜி நிறுவனம், காஞ்சிபுரத்தில் ரூ.700 கோடியில் அமைக்கப்பட்டுள்ள இமேக் ஜெனோவேஸ் என்ற எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகிவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். ரூ.2,530 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொழில் நிறுவனங்கள் மூலம் 3,600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும் நெல்லை டிபி சோலார் நிறுவனம், மதுரை இன்பினிக்ஸ் ெஹல்த் கேர் நிறுவனம், பினாக்கிள் நிறுவனம் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட மொத்தம் 4 ஆயிரத்து 469 பேருக்கான பணி ஆணைகளை வழங்கினார். முன்னதாக, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் இருந்து தொழில் துவங்குவதற்கான 19 நிறுவனங்கள் உள்ளிட்ட மொத்தம் 41 சிறிய மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள் மூலம் பல்வேறு தொழில்கள் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
நெல்லை, தூத்துக்குடி ராமநாதபுரம், திண்டுக்கல், குமரி, மதுரை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மீன் எண்ணெய், விவசாயம், தீப்பெட்டி, உப்பு, பர்னிச்சர்கள், ரிசார்ட், வாட்டர் ஸ்ேபார்ட்ஸ், பசுமை ஹைட்ரஜன், குளிர்பானங்கள், உலர் சாம்பல் செங்கல், மீன் வலை தயாரித்தல், பேவர்பிளாக், சமையல் எண்ணெய் உள்ளிட்ட தொழில்கள் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை முதல்வர் முன்னிலையில் தொழில்நிறுவனங்களின் உரிமையாளர்கள் பரிமாறிக் கொண்டனர்.
மொத்தம் ரூ.32,554 கோடி மதிப்பில் 49,845 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக தொழில்கள் துவங்குவதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தொடர்ந்து, முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் 250 ஏக்கர் பரப்பளவில், ஒரு விண்வெளி பூங்கா - ஸ்பேஸ் பார்க் அமைக்கப்படும். கப்பல் கட்டுமானத் துறையை மேம்படுத்த ஒரு பிரத்யேக நிறுவனம், முருங்கை ஏற்றுமதி மற்றும் சாகுபடி கூட்டமைப்பிற்காக, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் ரூ.5.59 கோடி செலவில் ஒரு பொது வசதி மையம் நிறுவப்படும். நெல்லை மாவட்டத்தில், தமிழ்நாடு உணவு பதப்படுத்துதல் மற்றும் வேளாண் ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் மண்டலப் பிரிவு அமைக்கப்படும் உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்த நிகழ்வில் அமைச்சர்கள் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்எல்ஏக்கள் மார்க்கண்டேயன், ஊர்வசி அமிர்தராஜ், சண்முகையா, டாக்டர் எழிலன், துணை மேயர் ெஜனிட்டா மற்றும் பல்வேறு நாடுகள், மாவட்டங்களைச் சேர்ந்த தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள், நிர்வாகிகள், தொழில் முனைவோர், அரசுத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் துறையின் செயலாளர் அருண்ராய் நன்றி கூறினார். இதை தொடர்ந்து அங்கிருந்து காரில் புறப்பட்டு தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், விமானம் மூலம் சென்னை புறப்பட்டுச் சென்றார்.