Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தொழில் முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் 22ல் அமெரிக்கா பயணம்: ஒன்றிய அரசு அனுமதி கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சையை சந்திக்கிறார்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் 22ம் தேதி அமெரிக்கா செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவர் அமெரிக்காவில் 15 நாட்கள் பயணம் செய்து, தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்த மாதம் இறுதியில் அமெரிக்கா செல்ல முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அவர் அமெரிக்கா செல்லும் தேதி மாற்றப்பட்டது. இப்போது, அடுத்த மாதம் ஆகஸ்டு 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசியக்கொடி ஏற்றுகிறார். அதையடுத்து, ஒரு சில நாட்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வது என்று முடிவாகி உள்ளது. அதன்படி ஆகஸ்ட் 22ம் தேதி அவர் அமெரிக்கா புறப்படுகிறார்.

மாநில முதல்வர் அரசு முறை பயணமாக வெளிநாடு செல்வதற்கு முன்பு ஒன்றிய அரசிடம் அனுமதி பெற வேண்டும். அதன்படி முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கோரப்பட்டது. அவர் 15 நாட்கள் வெளிநாடு சென்று வர ஒன்றிய அரசு அனுமதி வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து முதல்வரின் பயண திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க செல்வதையொட்டி, அமெரிக்க தூதரகத்தில் விசா விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. இதற்கும் தூதரகம் அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது.

முதல்வருடன் தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் தொழில்துறை செயலாளர், முதல்வரின் செயலாளர் என ஒரு குழுவும் அமெரிக்கா பயணத்துக்கு தயாராகி வருகிறது. அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு பல்வேறு தொழில் அதிபர்களை நேரில் சந்தித்து பேசுகிறார். சில தொழிற்சாலைகளை நேரடியாகவும் சென்று பார்வையிடுகிறார். அமெரிக்காவில், கூகுள் நிறுவனத்தின் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை உள்ளிட்ட முக்கிய தொழில் அதிபர்களை சந்தித்து பேச முதல்வர் திட்டமிட்டுள்ளார்.

தொழில் அதிபர்களை சந்திக்கும்போது, தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் தொழில் தொடங்க தமிழகம் வருமாறு நேரில் அழைப்பு விடுப்பார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்காது என்றே கூறப்படுகிறது. அதேநேரம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கலாம் என்ற தகவலும் பரவலாக வெளிவருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் 15 நாட்கள் வெளிநாடு செல்லும்போது அங்கிருந்தபடியே அவரே தமிழக நிர்வாகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலினே கவனிப்பார் என்றும், பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளது.