தொழில் முனைவோர் சரண்யாவின் கனவு!
இன்றைய காலகட்டத்தில் அனைத்துப் பெண்களும் பல்வேறு வேலைகளிலும் தொழிலிலும் சாதித்து வருகிறார்கள். அவர்களுக்கு தினந்தோறும் சமையல் செய்வது என்பது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. குடும்பப் பராமரிப்பு, சமையல், வேலைவாய்ப்பு என்கிற எதையும் விட்டுக் கொடுக்காமல், அதே நேரம் தங்கள் தொழிலிலும் திறம்பட செயல்பட வேண்டும் என்று இன்றைய பெண்கள் நினைக்கிறார்கள். அதற்கு பெரிதும் உதவக்கூடிய ஒரு எண்ணத்தில் உருவாக்கப்பட்டதுதான் எங்கள் உடனடி தயார் உணவுகள் என்கிறார் சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்த சரண்யா.
ரெடி டூ குக் மற்றும் ரெடி டூ ஈட் உணவு வகைகள் தயாரிப்பு தொழிலில் இறங்கும் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?
நான் பிரபல தனியார் கம்பெனியில் பதினைந்து ஆண்டுகளாக பெரும் பொறுப்பான பணியில் இருந்தேன். தினமும் இரவு வீட்டுக்கு வர ரொம்பவும் தாமதமாகும். அதானால் பெரும்பாலும் ஹோட்டலில் ஆர்டர் செய்து குழந்தைகளுக்கு தந்துவிடுவேன். இப்படியாகத் தான் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தது. இதனால் பல்வேறு உடல் உபாதைகளும், நிறைய செலவினங்களும், நடைமுறைச் சிக்கல்களும் ஏற்பட்டது. நாம் ஆரோக்கியமான வீட்டு தயாரிப்பு உணவுகள் சாப்பிட வேண்டும் என தேடியதில் எங்குமே அந்த மாதிரியான உணவுகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. இதே பிரச்னை நிறைய பெண்களுக்கும், சக தோழிகளுக்கும் இருப்பதை பார்த்து தான் நாமே இப்படியான உணவுகளை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வந்தால் என்ன என்று தோன்றியது. அதன் விளைவாக எனது வேலையினை விட்டு விட்டு உணவு தயாரிப்புத் தொழிலில் இறங்கினேன். தற்போது இத்தொழிலுக்கான நல்லதொரு வரவேற்புகள் எனக்கு கிடைத்து வருகிறது. ரெடி டூ ஈட் உணவுகள் டூஃபி என்கிற இகாமர்ஸ் தளங்களில் விற்பனைக்கு வைத்திருக்கிறேன். இதற்கான வரவேற்புகள் சிறப்பாகவே இருக்கிறது..
இதில் என்னென்ன தயாரிப்புகள் பெண்களுக்கு உதவியாக இருக்கிறது?
நாங்கள் சமைத்த உணவுகளையும் டெலிவரி செய்கிறோம். அதே போன்று சமையலுக்கு தேவையான பொருட்களையும் டெலிவரி செய்கிறோம். எங்களிடம் உறித்த பூண்டு, துருவிய தேங்காய், ப்ரெஷ்ஷான தேங்காய்ப் பால், சுத்தம் செய்து வெட்டிய காய்கறிகள், உரித்த சின்ன வெங்காயம் போன்றவை ஆர்டர்களுக்கேற்ப உடனே தயாரித்து அனுப்பி வைக்கிறோம். மேலும் தோசை மாவு, சப்பாத்தி மாவு, இன்ஸ்டன்ட் சட்னி பவுடர் வகைகள் மற்றும் மல்ட்டி பர்பஸ் பொடிகள் போன்றவற்றையும் தயாரித்து அனுப்பி வைக்கிறோம். எங்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் ஹோம் டெலிவரி செய்கிறோம். சென்னையின் மற்ற பகுதி களில் இதர டெலிவரி ஆப்கள் மூலமாக அனுப்பி வைக்கிறோம்.
இந்த தொழிலுக்கான ஆதரவுகள் வரவேற்புகள் எப்படி இருக்கிறது?
இன்று தொழில் மற்றும் வேலைகளில் பிஸியாக இருக்கும் நிறைய பெண்கள் எங்கள் வாடிக்கையாளர்களாக இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு எங்களது உணவுப் பொருட்கள் செல்கிறது இதில் பலரும் தொடர்ந்த வாடிக்கையாளர்களாக இருந்து வருகிறார்கள். வயதானவர்கள், பேச்சிலர்கள் என நிறைய பேர் இதை நம்பி இருக்கிறார்கள். இதற்காக எங்கள் சோழிங்கநல்லூர் பகுதியில் வீடு மாறி வந்தவர்கள் கூட இருக்கிறார்கள். என்னிடம் தற்போது ஐந்து பேர் வரை வேலை செய்து வருகிறார்கள். நிரந்தர வேலையை விட்டுவிட்டு இதில் இறங்க நினைத்த தருணத்தில் சற்று யோசனையாக இருந்தது. ஆனால் தற்போது இதற்கு கிடைக்கும் வரவேற்புகள் என்னை உற்சாகம் கொள்ளவே வைக்கிறது.
உணவுத் துறையில் உங்கள் அடுத்த கட்ட திட்டங்கள் என்ன?
சோழிங்கநல்லூர் பகுதியில் மட்டும் தற்போது உள்ள எங்கள் யூனிட்டை சென்னையின் பல்வேறு பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் திட்டங்கள் இருக்கிறது. தற்போது ஐந்து பேர் வரை வேலை செய்து வருகிறார்கள். மேலும் நிறைய பேருக்கு வேலை தர வேண்டும் என்கிற அளவிற்கு தொழிலை விரிவுபடுத்த வேண்டும். நிறைய பெண் தொழில் முனைவோரை உருவாக்க வேண்டும் என்கிற ஆசைகள் உண்டு. தற்போது 25 பெண் தொழில் முனைவோரின் தயாரிப்புகளை எங்கள் இகாமர்ஸ் தளங்களில் விற்பனை செய்து தருகிறோம். இது மேலும் அதிக அளவில் அதிகரிக்கச் செய்ய வேண்டிய முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். நிறைய புதிய தயாரிப்புகளையும் அறிமுகப்படுத்த வேண்டும். சைவ உணவு வகைகளை தயாரித்து தருகிறோம் என்பதால் நிறைய பேர் அசைவ உணவுகளையும் கேட்டு வருகிறார்கள். இனி வரும் காலத்தில் அதற்கான ஆயத்தங்களில் இறங்கியிருக்கிறோம். அதே போன்று விழாக்களுக்கான மொத்த ஆர்டர்களை எடுத்து செய்து தருகிறோம். அதிலும் அசைவ ஆர்டர்களை எடுத்து செய்ய பணிகளை செய்து வருகிறோம். இது போன்ற நிறைய திட்டங்கள் இருக்கிறது. வேறு பகுதிகளுக்கு ப்ரான்சஸிஸ் மூலமாக செய்யும் திட்டங்களையும் யோசித்து வருகிறோம்.
வேலையை விட்டுவிட்டு தொழிலில் இறங்க உங்கள் குடும்ப ஆதரவு எப்படி இருந்தது?
எனது இந்த புதிய தொழில் முயற்சிகளுக்கு எனது குடும்பமும் கணவரும் மிக முக்கியமான காரணமாகத் தான் இருந்தார்கள் என்றால் அது மிகையில்லை. இன்று வரை எனது தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு திட்டங்களையும் ஒத்துழைப்பையும் செய்து வருவது எனது கணவர் தான். எனது தொழில் மற்றும் வேலை என எல்லா காலத்திலும் எனது மாமியார் மற்றும் அம்மா இருவரும் எனது குழந்தைகளை பார்த்துக் கொள்ளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். இவர்களால் தான் என்னால் தொழிலில் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல முடிகிறது. எனது தொழில் சார்ந்து நிறைய மீட்டிங் மற்றும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள வேண்டி இருக்கும். குடும்ப ஒத்துழைப்பு பெண் களில் வேலை மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கு பெரும் காரணிகள்தான்.
இத்தொழிலில் பெண்களுக்கான வாய்ப்புகள் எப்படி இருக்கும்?
இது பெண்களை பொறுத்தமட்டில் பாதுகாப்பான சிறந்த ஒரு தொழில். அதிக முதலீடுகள் தேவையில்லை. வீட்டிலிருந்து சுலபமாக சிறிய அளவில் தொடங்கிவிடலாம். இத்தொழிலில் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் என்பதால் நிறைய பெண்கள் துணிந்து இறங்கலாம். உணவுப் பொருட்களுக்கான தேவைகள் மற்றும் வரவேற்புகள் எப்போதும் எக்காலத்திலும் இருக்கிறது. நம்முடைய தயாரிப்புகள் தரமானதாகவும், சிறந்ததாகவும் இருந்தால் வெற்றி நம்மைத் தேடி வரும். அதே போன்று நாமும் நிறைய பெண்களுக்கு இதன் மூலமாக வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தரலாம். வீட்டிலிருந்தபடியே கீரையை ஆய்ந்து தருவது, பூண்டு வெங்காயம் உரித்து தருவது, காய்கறிகளை கட் செய்து தருவது என எளிதாகவே வருமானம் பார்க்கலாம். இன்றைய நவீன யுகத்தில் தேவையே எந்த ஒரு தொழிலையும் நிர்ணயம் செய்கிறது. அதிக தேவைகள் அதன் வெற்றியை உறுதிசெய்கிறது. ஆரோக்கியமான தரமான உணவுகள் நமது எதிர்கால சந்ததி களின் உடல் நலத்தையும் காக்கிறது என்பது சிறந்த விஷயம் தானே என்கிறார் சரண்யா. இதற்காக We Do Women Healthpreneurs விருதினையும் அறம் விருதினையும் பெற்றுள்ளார் என மகிழ்வுடன் சொல்கிறார் சரண்யா.
- தனுஜா ஜெயராமன்