*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை
கோத்தகிரி : கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையோரம் அமைந்துள்ள வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணையை தூர் வார வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோத்தகிரியில் இருந்து கொடநாடு செல்லும் சாலையோரம் புதூர் அருகே வனத்துறைக்கு சொந்தமான தடுப்பணை அமைந்துள்ளது. வருடம் முழுவதும் வற்றாமல் வனப்பகுதியில் இருந்து வரும் ஊற்று நீர் இந்த தடுப்பணையில் சேகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த தடுப்பணை தண்ணீரை குடித்து வன விலங்குகள் தாகத்தை தீர்த்து வருகின்றன. அது மட்டுமின்றி, இந்த தண்ணீர அரசுப் போக்குவரத்து கழக பணிமனை மற்றும் தீயணைப்புத் துறையினரும் வாகனங்களில் சேகரித்து சென்று பயன்படுத்தி வருகின்றனர்.
மேலும் சுற்று வட்டார கிராம மக்கள் துணி துவைக்கவும், வாகன ஓட்டுநர்கள் வாகனங்களைக் கழுவவும் இந்த நீரைப் பயன்படுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்த தடுப்பணை முழுவதும் மண் அடைந்து, புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்ததால் சுமார் 80 ஆயிரம் ரூபாய் செலவில் தடுப்பணை தூர் வாரப்பட்டது. இதனால் அந்த தடுப்பணையில் அதிக அளவு தண்ணீரை சேமித்து வைக்க முடிந்தது.
இந்நிலையில், தொடர்ந்து பராமரிப்பு இல்லாததால் தடுப்பணை முழுவதும் புதர் செடிகள் அடர்ந்து வளர்ந்து, மண் மூடியுள்ளது. எனவே தடுப்பணையில் தண்ணீரை சேகரித்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வாகனங்களை கழுவ வரும் வாகன ஓட்டிகள் தடுப்பணை தண்ணீரில் வாகனங்களை கழுவி விட்டு, பயனற்ற பிளாஸ்டிக் பொருட்களை அங்குள்ள தொட்டியில் போட்டு விட்டு செல்வதால் அங்கு பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்து காணப்படுகிறது.
இதனால் தண்ணீர் குடிக்க வரும் வன விலங்குகள் பிளாஸ்டிக்கை உட்கொண்டு உயிரிழக்கும் அபாயமும் ஏற்பட்டு வருகிறது. எனவே தடுப்பணையை முழுமையாக தூர்வாரி, கொட்டிக் கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளையும், மண் அடைப்பையும் அகற்ற வேண்டும். மேலும் அங்கு வாகனங்கள் கழுவுவதை தடுக்கவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.