* 1 கி.மீ தூரம் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலம்
* நடவடிக்கை எடுக்க மின்வாரியத்துக்கு கோரிக்கை
செங்கோட்டை, டிச.8: செங்கோட்டை அருகே சாலையை ஆக்கிரமித்துள்ள இரண்டு மின்கம்பங்களால் பேருந்துகள் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை 1 கி.மீ தூரம் நடந்து சென்று பேருந்தில் ஏறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் மின்வாரியம் தலையிட்டு மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கோட்டை அருகேயுள்ள புதூர் பேரூராட்சியில் பூலாங்குடியிருப்பு மற்றும் லாலாக்குடியிருப்பு பகுதிக்கு செல்லும் சாலையில் பள்ளிவாசல் அருகே மின்வாரியத்தின் சார்பில் இரண்டு மின் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை சாலையில் திரும்ப வழியில்லாமல் ஆக்கிரமித்துள்ளதால், பேருந்துகள், கனரக வாகனங்கள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், முதியோர் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பூலாங்குடியிருப்பு ஆற்றுப்பாலம் அருகே பஸ் நிறுத்தத்தில் பேருந்தில் ஏறிச்செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள் பல முறை மின்சாரவாரியத்திடம் புகார் தெரிவித்தனர். ஆனால் தற்போது வரை மின்கம்பங்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் தற்போது வரை பல்வேறு தரப்பினரும் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘சாலையை ஆக்கிரமித்துள்ள இரண்டு மின்கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என்று பலமுறை புகார் மனு அளித்துள்ளோம். இதுவரை மின் கம்பங்கள் மாற்றம் செய்யவில்லை.இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேருந்திற்காக நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் பேருந்து வந்து செல்ல ஏதுவாக இரண்டு மின் கம்பங்களை வேறொரு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும்’ என்றனர்.


