பஸ் உள்ளிட்ட வாகனங்களுக்கு தீ வைப்பு பிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டம் வன்முறையில் ஈடுபட்ட 200 பேர் கைது
பாரிஸ்: பிரான்சில் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது கலவரம் வெடித்தது. இதில், பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரான்ஸ் நாட்டின் பிரதமராக இருந்த பிரான்கோயிஸ் பேரோ கொண்டு வந்த செலவு குறைப்பு திட்டம் கூட்டணி கட்சிகள் இடையே வரவேற்பை பெறவில்லை. இதையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரோவுக்கு போதிய ஆதரவு இல்லாததால் பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து புதிய பிரதமராக நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் செபாஸ்டின் கெல்கோர்னுவை பிரதமராக நியமித்து அதிபர் மேக்ரோன் உத்தரவிட்டார். மேக்ரோனின் பதவி காலத்தில் 6 பிரதமர்கள் இருந்தனர். தற்போது 7 வதாக செபாஸ்டின் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அங்கு அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. தலைநகர் பாரிஸ் உள்பட பல இடங்களில் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. பஸ் உள்ளிட்ட வாகனங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. வன்முறையில் ஈடுபட்ட 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.