Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பஸ், ரயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயணிக்கலாம்: செயலியை உருவாக்க நிறுவனம் தேர்வு

சென்னை: பஸ், ரயில், மெட்ரோவில் ஒரே டிக்கெட்டில் பயண திட்டத்திற்கு செயலியை உருவாக்க பெங்களூர் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழும அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல பஸ், மின்சார ரயில், மெட்ரோ உள்ளிட்ட மூன்று வசதிகள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனித்தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள். மக்கள் தனித்தனியாக பயணச்சீட்டு பயன்படுத்தும் நிலையில் இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. அதன்படி சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரயில், மெட்ரோ ரயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறையை கொண்டு வர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பணிகளை மேற்கொண்டது. இதற்காக தனியாக செயலி ஒன்றை உருவாக்க டெண்டர் கோரப்பட்டது. இந்நிலையில் இந்த செயலியை உருவாக்க பெங்களூரை சேர்ந்த மூவிங் டெக் இன்னோவேஷன் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான பணியாணையும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் பெங்களூருவில் நம்ம யாத்ரி செயலியை நிர்வகித்து வருகிறது குறிப்பிடத்தக்கதாகும்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பயணச்சீட்டு முறையின் முதல் கட்டத்தில் டாக்ஸி ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஷேர் ஆட்டோக்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகளை நாங்கள் உருவாக்கி வருகிறோம். கியூஆர் குறியீடுகள் மூலமாகவோ அல்லது ஓடிபிக்கள் மூலமாகவோ பயணிகள் டாக்ஸி கட்டணத்திற்கு பணம் செலுத்தலாம். இந்திய ரயில்வே இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் ஒருங்கிணைந்த டிக்கெட் முறையை அதன் செயல்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளது. மேலும் இந்த செயலியில் சினிமா டிக்கெட் முன்பதிவு, பார்க்கிங் டிக்கெட் பெறுவது உள்ளிட்ட அம்சங்களையும் சேர்க்கவுள்ளோம். இந்த அமைப்பு சிங்கப்பூரில் உள்ள போக்குவரத்து வலையமைப்பைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக வரும் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.