செய்யாறு: ஓடும் பஸ்சில் ரகளை செய்ததை கண்டித்த பெண் போலீசின் கன்னத்தில் அறைந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம், ஐயங்கார்குளத்ைத சேர்ந்தவர் நவீன்குமார். இவரது மனைவி கண்மணி(35). இவர் சென்னை கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் போலீசாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 31ம் தேதி மாலை பணி முடிந்த பின்னர் தனியார் பஸ்சில் ஐயங்கார்குளத்திற்கு வந்தார். அப்போது அந்த பஸ்சில் ஒரு வாலிபர், பயணிகளிடம் தகராறு செய்துள்ளார். இதை பார்த்த கண்மணி, அந்த வாலிபரை அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.
ஆனால் அந்த வாலிபர் தொடர்ந்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனால் போலீஸ்காரர் கண்மணி, அந்த வாலிபரிடம் தொடர்ந்து ரகளை செய்தால் பஸ்சில் இருந்து கீழே இறக்கிவிடுவேன் என எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், கண்மணியை ஆபாசமாக பேசியதுடன், அவரது கன்னத்தில் பளார் என அறைந்தாராம். திடீரென நடந்த இந்த சம்பவத்தால் போலீஸ்காரர் கண்மணி மட்டுமின்றி பயணிகளும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து கண்மணி தூசி ேபாலீசில் நேற்று முன்தினம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, போலீஸ்காரரை அறைந்த வெம்பாக்கம் அடுத்த அழிவிடைதாங்கி கிராமத்தை சேர்ந்த சீனிவாசன் (35) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர் அவரை செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.