திருவொற்றியூர்: பணியில் இருந்தபோது மாரடைப்பால் நடத்துனர் உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூரில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் ராஜா கடை பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (54). இவர், பாரிமுனையில் இருந்து திருவொற்றியூர் வரை செல்லும் தடம் எண் ‘56 சி’ என்ற மாநகர பேருந்தில் நடத்துனராக பணிபுரித்து வந்தார். நேற்று காலை 6 மணிக்கு பேருந்தில் திருவொற்றியூர் நோக்கி சென்றார்.
அஜாக்ஸ் பகுதியில் பேருந்து சென்ற போது ரமேஷுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதால் மயங்கி விழுந்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் உடனடியாக அவரை மீட்டு, திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர், ரமேஷ் உயிரிழந்துவிட்டார், என்று தெரிவித்துள்ளார். உயிரிழந்த ரமேஷுக்கு லதா என்ற மனைவி, ஒரு மகன், மகள் உள்ளனர். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.