Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிதவைக் கருவி (Buoy)

மிதவை (Buoy) என்பது பல்வேறு நோக்கங்களைக்கொண்ட ஒரு மிதக்கும் கருவியாகும். நிலையாக ஓரிடத்தில் இது நங்கூரமிடப்படலாம் அல்லது கடல் நீரோட்டங்களுடன் செல்ல அனுமதிக்கப்படலாம். கடல், ஆறு போன்றவற்றில் கப்பலிலோ, படகிலோ செல்லும்போது விபத்துகளைத் தவிர்க்க ஆபத்தான இடங்கள், பாறைகள் மற்றும் ஆழம் குறைந்த பகுதிகளைக் காட்டுவதற்கு மிதவைக் கருவி பயன்படும்.

மிதவைகளின் தோற்றம் குறித்த தரவுகள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் 1295ஆம் ஆண்டு வாக்கில் ஒரு மாலுமியின் கையேடு எசுப்பானியாவிலுள்ள குவாடல்கிவிர் ஆற்றில் பயணித்தல் குறித்த கையேட்டில் மிதவைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆரம்பகால மிதவைகள் மரக் கட்டைகள் அல்லது படகுகளாக இருந்திருக்கலாம். ஆனால், 1358ஆம் ஆண்டில் பீப்பாய் மிதவை பயன்படுத்தப்பட்டதற்கான பதிவு உள்ளது. எளிய பீப்பாயை கடற்பரப்பில் பாதுகாப்பது கடினமாக இருந்தது. எனவே, குறுகிய முனையில் ஒரு திடமான செருகியுடன் கூடிய கூம்பு வடிவ மிதவைகள் உருவாக்கப்பட்டன. இதன் மூலம் ஒரு நங்கூரத்திலுள்ள வளையத்தை இணைத்துக்கொள்ள முடியும். பின்னர் இரு கூர்குவி மிதவைகள் உருவாக்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரும்பு மிதவைகள் உருவாக்கப்பட்டன. அவை நீர் புகாத பெரிய முகப்புடன் மணிகள் கொண்டிருந்தன.இவற்றில் மணியோசை தொடர்ந்து கேட்கும் மிதவைகளும், ஊதல் ஒலி உண்டாக்கும் மிதவைகளும் உண்டு. பனி மூடியுள்ள பகுதிகளில் விளக்கு ஒளி சரியாகத் தெரிவதில்லை. அத்தகைய இடங்களில் இந்த மிதவைகள் மணியோசையாலோ, ஊதல் ஒலியாலோ எச்சரிக்கை செய்கின்றன.

1879ஆம் ஆண்டில் இயூலியசு பிஞ்சு சுருக்கப்பட்ட வாயுவைப் பயன்படுத்தி மிதவைகளின் வெளிச்சத்திற்கான காப்புரிமையைப் பெற்றார்.இது 1912ஆம் ஆண்டு முதல் குசுடாஃப் டேலனின் அசிட்டிலீன் விளக்கு மூலம் மாற்றப்பட்டது. இரவு நேரங்களில் இவ்விளக்குகள் பயன்படுகின்றன. மிதவையினுள்ளேயே அழுத்தநிலையில் வைக்கப்பட்டிருக்கும் வாயு இந்த விளக்குக்கு எரிபொருளாகப் பயன்படுகின்றது. மின்கலத்தின் மூலம் எரியும் மின்சார விளக்குகளும் சில மிதவைகளில் உண்டு. விளக்கு ஒளியின் நிறமும் அதன் அளவும் இடத்திற்கு ஏற்ற வகையில் மாறுபடும். இவ்வகை மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள். இத்தகைய மிதவைகளை ஒருவகைக் கலங்கரை விளக்கம் என்றே சொல்லலாம். பாறைகள் இருக்குமிடம், ஆழம் குறைந்த இடம், மிக ஆபத்தான இடம், செல்ல வேண்டிய திசை போன்ற பலவற்றைக் குறிக்க மிதவைகளில் வெவ்வேறு நிறத்தில் வர்ணம் பூசப்பட்டிருக்கும். குறுக்காகவோ நெடுக்காகவோ பட்டை தீட்டுவதும் உண்டு. எண்களையும் குறிப்பிட்டிருப்பார்கள்.