பூண்டி நீர்த்தேக்கம் அருகே கிருஷ்ணா கால்வாயில் செல்ஃபி எடுத்த வாலிபர் தவறி விழுந்ததால் பரபரப்பு: தேடும் பணி தீவிரம்
திருவள்ளூர்: கிருஷ்ணா கால்வாயில் செல்ஃபி எடுத்தபோது தவறி விழுந்த வாலிபரை. தேடும் பணி நடக்கிறது. கடந்த சில நாட்களாக பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் முழு கொள்ளளவு எட்டியுள்ளது. இதனால் உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. இதனால் பூண்டி நீர்த்தேக்கத்தை பொதுமக்கள் குழந்தைகளுடன் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அதேபோன்று நேற்று மாலை, சென்னை வியாசர்பாடி பகுதியில் இருந்து பூண்டி நீர் தேக்கத்தை பார்ப்பதற்காக யாசிக் (22) மற்றும் அவரது நண்பர்கள் என 4 பேர் வந்தனர். அவர்கள், பூண்டியில் இருந்து வெளியேறும் நீரை பார்த்து ரசித்தனர்.
தொடர்ந்து ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா கால்வாய் மூலமாக பூண்டிக்கு வரும் கால்வாயில் யாசிக் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, எதிர்பார்க்காத விதமாக தண்ணீரில் தவறி விழுந்து தத்தளித்தார். இதை பார்த்ததும் சக நண்பர்கள் அலறியடித்து சத்தம் போட்டனர். மேலும் அங்கு வந்திருந்தவர்களாலும் மீட்க முடியவில்லை. சிறிது நேரத்தில், வேகமாக சென்று கொண்டிருந்த தண்ணீரில் நீந்த முடியாமல் யாசிக் மூழ்கினார்.
இதற்கிடையில் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீரர்கள், விரைந்து வந்து யாசிக்கை தேடினர். இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று காலையில் மீண்டும் யாசிக்கை தேடும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எச்சரிக்கை
மழைக்காலங்களில் பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர் இருப்பு உயரும்பட்சத்தில் உபரிநீர் கால்வாய் வழியாக தண்ணீர் வேகமாக வெளியேறும்போது பொதுமக்கள் குளிக்கவோ, துணிகள் துவைக்கவோ, செல்ஃபி எடுக்கவோ கூடாது என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை பொதுமக்கள் கண்டு கொள்ளாமல் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சில நேரங்களில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் தொடர்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
