இங்கிலாந்து அணியுடன் இன்று துவங்கும் ஒரு நாள் போட்டித் தொடரில், 3வது போட்டியில் இந்திய நட்சத்திர பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கூறியிருந்தது. ஆனால், பும்ரா ஒரு நாள் தொடரில் இருந்து விலகி இருப்பதாக பின்னர் தகவல் வெளியானது. இந்நிலையில், பிசிசிஐ வெளியிட்ட சமீபத்திய செய்திக் குறிப்பில் இந்திய அணி வீரர்கள் பட்டியலில் ஜஸ்பிரித் பும்ராவின் பெயர் இடம்பெறவில்லை. எனவே, ஒரு நாள் தொடரில் இருந்து பும்ரா விலகி இருப்பது உறுதியாகி உள்ளது.
ஆஸ்திரேலியாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியின்போது முதுகில் காயமடைந்த பும்ரா பாதியில் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவர் 5 வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தனர். போட்டியில் பங்கேற்கும் வகையில் உடல் நிலை சீராகாததால் ஒரு நாள் தொடரில் இருந்து அவர் விலகி இருக்கக் கூடும் என தகவல்கள் கூறுகின்றன. இருப்பினும், பாகிஸ்தானில் வரும் 19ம் தேதி துவங்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பும்ரா இடம்பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.