Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு கோலாகலம்: 989 காளைகள் சீறி பாய்ந்தன; 750 வீரர்கள் போராடி அடக்கினர்; மாடு முட்டியதில் முதியவர் பலி, 67 பேர் படுகாயம்

அலங்காநல்லூர்: உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரில் நேற்று அனல் பறக்க ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் 989 காளைகள் களம் இறக்கப்பட்டு சீறிப்பாய்ந்தன. இவற்றை அடக்க 750 வீரர்கள் போராடினர். மாடு முட்டிதில் முதியவர் பலியானார். மேலும் 67 பேர் படுகாயம் அடைந்தனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் களைகட்டும். கடந்த 14ம் தேதி பொங்கலன்று அவனியாபுரம், மாட்டுப்பொங்கலான நேற்று முன்தினம் பாலமேடு மஞ்சமலை ஆற்றுத்திடலில் ஜல்லிக்கட்டு வெகுசிறப்பாக நடந்தது. காணும் பொங்கல் தினமான நேற்று அலங்காநல்லூர் கோட்டை முனியசாமி கோயில் திடலில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதில், பங்கேற்பதற்காக 5,786 காளைகள் பதிவு செய்ததில் 1,100 காளைகள் மட்டும் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றிருந்தன. இதேபோல், 1,698 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க முன்பதிவு செய்ததில் 750 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர்.

காலை 8.15 மணியளவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா, எம்எல்ஏக்கள் வெங்கடேசன், தளபதி, தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சேடபட்டி மணிமாறன் உடனிருந்தனர். வாடிவாசலில் இருந்து பாரம்பரிய முறைப்படி கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. முதலில் அவிழ்த்து விடப்பட்ட கோயில் காளைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்கக்காசு பரிசு வழங்கினார். அதன்பின் ஒவ்வொரு காளையாக அவிழ்த்து விடப்பட்டது. வாடிவாசலில் இருந்து வெளியேறிய காளைகள் ‘தில் இருந்தால் தொட்டுப்பார்’ என திமிலை உயர்த்தி சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்களும் ‘அடக்காமல் விடமாட்டேன்’ என தீரம் காட்டி தோள் தட்டி அடக்கினர்.

ஒரு சில காளைகள் மைதானத்தில் ரவுண்ட் கட்டி ஆட்டம் காட்டின. காலை 8.15 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. மொத்தம் 10 சுற்றுகள் நடைபெற்றன. ஒரு சுற்றுக்கு 75 வீரர்கள் வீதம் களமிறக்கப்பட்டனர். இதேபோல் மொத்தமாக 10 மணி நேரம் போட்டியில் 10 சுற்றுகள் நடந்ததில் 989 காளைகள் களமிறக்கப்பட்டன. 750 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். களமிறங்காத காளைகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியில் 20 காளைகளை அடக்கிய சிவகங்கை மாவட்டம், பூவந்தியை சேர்ந்த அபிசித்தருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. இத்துடன் நாட்டுப் பசுவுடன் கன்றும் வழங்கப்பட்டது. இவர் கடந்த முறை 2ம் இடம் பிடித்தார். 13 காளைகளை அடக்கிய மதுரை மாவட்டம், பொதும்புவை சேர்ந்த ஸ்ரீதருக்கு ஆட்டோ, 3வது பரிசாக 10 காளைகளை அடக்கிய மடப்புரம் விக்னேசுக்கு பைக், 9 காளைகளை அடக்கிய ஏனாதியை சேர்ந்த அஜய்க்கு மொபட் வழங்கப்பட்டது.

போட்டியில் முதல்முறையாக பங்கேற்று களத்தின் நின்று விளையாடி வீரர்களை மிரட்டி சிறந்த காளைக்கான முதல் பரிசு பெற்ற சேலம் பாகுபலி காளையின் உரிமையாளர் மோகனுக்கு டிராக்டர், நாட்டுப்பசுவுடன் கன்று பரிசாக வழங்கப்பட்டது. 2வது பரிசாக வக்கீல் பார்த்தசாரதிக்கு பைக் மற்றும் விவசாய உழவு கருவி மற்றும் 3வது பரிசாக புதுக்கோட்டை கண்ணனுக்கு எலக்ட்ரிக் பைக், 4வது பரிசாக இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமானுக்கு எலக்ட்ரிக் பைக் பரிசாக வழங்கப்பட்டன. போட்டியில் மாடுபிடி வீரர்கள் 22 பேர், காளையின் உரிமையாளர்கள் 19 பேர், பார்வையாளர்கள் 31 என மொத்தம் 72 பேர் காயமடைந்தனர்.

ஜல்லிக்கட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அலங்காநல்லூர் அருகே டி.மேட்டுப்பட்டியை சேர்ந்த பெரியசாமி (66) என்பவரை மாடு கழுத்தில் குத்தியது. இதில் படுகாயம் அடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அனைத்து காளைகளுக்கும் வேஷ்டி, துண்டு மற்றும் கிப்ட் பாக்ஸ் உள்ளிட்டவை வணிகவரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி சார்பில் வழங்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நிகழ்வை துவக்கி வைத்து சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மகன் இன்பநிதி ஆகியோர் பார்த்து ரசித்தனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் சிறப்பாக விளையாடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் ஒரு பவுன் தங்க மோதிரத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நடிகர் சூரி முதல் விஜயபாஸ்கர் வரை...

அலங்காநல்லூரில் நடிகர் சூரியின் காளையும், மாஜி அமைச்சர்கள் ெசல்லூர் ராஜூ, விஜயபாஸ்கர், ஸ்ரீரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜசேகரன், ஆகியோரின் காளைகள் பிடிபடாமல் வெற்றி பெற்று பரிசுகளை அள்ளின. இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டைமான் போட்டியை பார்க்க வந்திருந்தார். அவரது காளையும் களமிறக்கப்பட்டது.

‘வெரிகுட்... வாவ்... சூப்பர்’ வெளிநாட்டினர் ஆரவாரம்

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்வையிட சுற்றுலாத்துறை சார்பில், இலங்கை, கனடா, மலேசியா, பிரான்ஸ், தைவான், இத்தாலி, சுலிட்சர்லாந்து உள்ளிட்ட 23 நாடுகளைச் சேர்ந்த 153 பேர் அழைத்து வரப்பட்டிருந்தனர். ஒரே நேரத்தில் அனைவரையும் அனுமதிக்க போதுமான கேலரி இல்லாததால் அனைவரும் சுழற்சி முறையில் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர்.

* ஜல்லிக்கட்டை கண்ட இஸ்ரேலைச் சேர்ந்த ஓஸ்நாக், ‘‘எனக்கு புதிய அனுபவத்தை இந்த ஜல்லிக்கட்டு தந்தது. மிக அழகாக இந்த விளையாட்டு இருந்தது. என் வாழ்வில் மறக்க முடியாத தருணம் இது’’ என்றார்.

* மலேசியாவைச் சேர்ந்த கிறிஸ்டினா, ‘‘தமிழ்நாட்டிற்கு முதல் முறையாக வருகிறேன். எனது பூர்வீகம் தமிழ்நாடு தான். இப்போது தான் முதன்முறையாக நேரில் பார்க்கிறேன். பொதுவாக இந்த விளையாட்டை பார்க்கும் போது நானும் ஒரு தமிழச்சி என்பது பெருமையளிக்கிறது’’ என்றார்.

* பிரான்சைச் சேர்ந்த யார்ன், ‘‘காளைகளுக்கு காயமின்றி, மனிதர்கள் நடத்தும் இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்துள்ளது. என் நாட்டிற்கு இந்த விஷயத்ைத கொண்டு செல்வேன்’’ என்றார்.

* ஜெர்மனியைச் சேர்ந்த ஜெர்மனி ஆன்டே தம்பதி, ‘‘இதுதான் எங்களுக்கு முதன் முறை. ஆஹா... இது ஒரு புதிய அனுபவம்... மார்வலஸ்’’ என வியந்தனர்.

* அமெரிக்காவைச் சேர்ந்த ரயன், ‘‘இப்போட்டியை முதன் முதலாக பார்க்கிறேன். மிக அற்புதமாக உள்ளது. போட்டியை சிறப்பான முறையில் நடத்துகின்றனர். காளையும், மாடுபிடி வீரரும் ஒரே நேரத்தில் வீரத்தை வெளிப்படுத்துவதை பார்க்க முடிகிறது. அடுத்தடுத்த ஆண்டும் ஜல்லிக்கட்டைக் காண கட்டாயம் வருவேன்’’ என்றார்.

மாவட்ட சுற்றுலா அலுவலர் பாலமுருகன் கூறும்போது, ‘‘இதுவரை நடந்த ஜல்லிக்கட்டின் போது வெளிநாட்டினரை அழைத்தால் சுமார் 80 பேர் வரை தான் வருவர், இம்முறை 150க்கும் மேற்பட்டோர் வந்துள்ளனர். பதிவு செய்யாதவர்கள் கூட பார்த்து சென்றுள்ளனர்’’ என்றார்.

துணை முதல்வருக்கு ஆஸ்திரேலிய நாட்டு எம்பி வாழ்த்து

இந்திய சுற்றுப்பயணம் வந்த ஆஸ்திரேலியா எம்பி வாரன் கிர்பி, மற்றும் அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக்கழக தமிழ் இருக்கை செயலர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தனர்.

ஆள் மாறாட்ட வீரர் வெளியேற்றம்

களத்தில் 126ம் நம்பர் டீசர்ட் அணிந்திருந்த வீரர், தனது டீசர்ட்டை மாற்றிக் கொண்டு மறுமுறையும் களமிறங்கியதால் அவரை களத்தைவிட்டு வெளியேற்றி கலெக்டர் சங்கீதா உத்தரவிட்டார்.

காளையை அடக்க வந்த அயர்லாந்துக்காரர் நீக்கம்

அயர்லாந்து நாட்டை சேர்ந்தவர் ஆண்டனி கோலன் (53). சென்னையில் ஐடி நிறுவனம் நடத்துகிறார். 10 ஆண்டுக்கும் மேலாக சென்னையில் வசித்து வரும் இவர், அலங்காநல்லூரில் காளையை அடக்க ஆன்லைன் மூலம் பதிவு செய்து, மாடுபிடி வீரருக்கான டோக்கன் பெற்றிருந்தார். மருத்துவ குழுவினர் உடற்தகுதி பரிசோதனை நடத்தினர். அவருக்கு 53 வயதானதால் களமிறங்க அனுமதி மறுக்கப்பட்டார். இதை சற்றும் எதிர்பாராத அவர் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அவர் கூறுகையில், ‘‘15 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டை ஆர்வத்துடன் பார்த்து வருகிறேன். அதில் நானும் பங்கேற்க வேண்டும் என்ற ஆசையுடன் முன்பதிவு செய்து இங்கு வந்தேன். ஆனால் வயது மூப்பின் காரணமாக எனக்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது இந்தியாவில் தலைசிறந்த விளையாட்டு. என்னை பொறுத்தவரை ஜல்லிக்கட்டு தான் பர்ஸ்ட். கிரிக்கெட் நெக்ஸ்ட் தான்’’ என்றார்.

கலைஞர் ஏறுதழுவுதல் அரங்கில் பிப். 9ல் ஜல்லிக்கட்டு நடக்கிறது

அமைச்சர் மூர்த்தி கூறுகையில், ‘‘தமிழரின் பாரம்பரிய விளையாட்ைட வெளிநாட்டினரும் ரசித்து சென்றுள்ளனர். கலைஞர் நூற்றாண்டு ஏறு தழுவுதல் அரங்கில் மதுரை கிழக்கு தொகுதி சார்பில் பிப். 9ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்துள்ளோம். ஆய்வு செய்து உரிய தேதியில் அனுமதி கிடைத்ததும் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்’’ என்றார்.