Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

வருகிறது புல்லட் ரயில் சேவை சென்னை- ஐதராபாத்திற்கு 2.20 மணி நேரத்தில் செல்லலாம்: தமிழ்நாடு அரசிடம் திட்ட அறிக்கை சமர்பிப்பு

சென்னை: சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவை தொடர்பான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் தெற்கு மத்திய ரயில்வே அளித்துள்ளது. இந்த திட்டம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் சென்னையில் இருந்து ஐதராபாத்திற்கு 2.20 மணி நேரத்தில் செல்லலாம். இந்தியாவில் முதல் புல்லட் ரயில் சேவை மும்பையில் இருந்து அகமதாபாத்திற்கு தொடங்கப்பட உள்ளது. தற்போது, கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

இதுதவிர நாட்டின் மற்ற பகுதிகளுக்கும் இந்த புல்லட் ரயில் சேவையை விரிவுபடுத்த ஒன்றிய அரசு முனைப்பு காட்டி வருகிறது. குறிப்பாக, தென்மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களுக்கு புல்லட் ரயில் சேவை தொடங்க ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, சென்னை- ஐதராபாத், பெங்களூரு- ஐதராபாத் என 2 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வழித்தடம் தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை தெற்கு மத்திய ரயில்வே தயாரித்து, தமிழ்நாடு அரசிடம் வழங்கி உள்ளது. சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ஜெயக்குமார் இதுகுறித்து கூறுகையில்,‘ சென்னை- ஐதராபாத் இடையே புல்லட் ரயில் சேவைக்கான விரிவான திட்ட அறிக்கை மாநில அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது.

அதற்கு ஒப்புதல் அளித்த ஒரு மாதத்தில் திட்டம் இறுதி செய்யப்படும். இந்த புல்லட் ரயில் பாதை முதலில் கூடூர் வழியாக செல்லும்படி திட்டமிட்டிருந்தது. ஆனால், திருப்பதி வழியாக புல்லட் ரயில் செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கூறியது. இதனால், அதற்கு ஏற்ப திட்ட அறிக்கை மாற்றப்பட்டுள்ளது,’என்றார். சென்னையில் இருந்து தெலங்கானா மாநிலம் ஐதராபாத்திற்கு செல்ல தற்போது 12 மணி நேரம் ஆகிறது. புல்லட் ரயில் இயக்கப்பட்டால் 778 கிமீ தூரத்தை வெறும் 2.20 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

சென்னையில் 2 ரயில் நிலையம் அமைய உள்ளது. ரயில் நிலையம், புதிய வணிக வளாகம், போக்குவரத்து மையங்கள் உருவாக்கம் மற்றும் பிற மேம்பாட்டு பணிகளுக்காக ஒவ்வொரு ரயில் நிலையத்தையும் சுற்றி 50 ஏக்கர் நிலம் தேவை என்று தமிழ்நாடு அரசிடம் ரயில்வே கோரியுள்ளது. மேலும், சீரமைப்பு பணிகள், ரயில் நிலையங்கள் அமையும் இடங்களை விரைவில் இறுதி செய்ய வேண்டும்.

நிலம் கையகப்படுத்துவதற்கான கொள்கை ரீதியான ஒப்புதலை விரைந்து அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசு முறையான அனுமதிகளை அளித்த பிறகு அடுத்தக்கட்ட பணிகள் தொடங்கும். தென் இந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் சென்னைக்கு, இந்த புல்லட் ரயில்சேவை கூடுதல் வளர்ச்சியை அளிக்கும் என்பது நிதர்சனம்.

* காத்திருக்கும் பெரும் சவால்

தமிழ்நாட்டில் மொத்தம் 61 கிமீ தூரத்திற்கு புல்லட் ரயில் பாதை அமைய உள்ளது. அதில், 11.6 கிமீ தூரத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும். கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்பு விரிவான புவியியல் தொழில்நுட்ப ஆய்வுக்கு உட்படுத்தப்படும். மேலும், இந்த வழித்தடம் போண்டவாக்கம், தச்சூர், விச்சூர், மாத்தூர் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகள் வழியாக செல்கிறது.

இங்குள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் அருகில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும். அதனை எப்படி திட்டமிடுவது, செயல்படுத்துவது, அதனால் ஏற்படும் இடையூறுகள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவை இந்த திட்டத்திற்கு பெரும் சவாலாக உள்ளது.

* சென்னை சென்ட்ரல், மீஞ்சூர் (ரிங் ரோடு) ஆகிய இடங்களில் புல்லட் ரயில் நிலையங்கள் அமைய உள்ளது. 65 தேசிய நெடுஞ்சாலைகளை கடந்து இந்த ரயில் பாதை செல்லும்.