Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

25 மாடிகள் கொண்ட 4 கட்டிடங்கள் எம்பிக்களின் புதிய குடியிருப்பை பிரதமர் மோடி திறந்து வைத்தார்: பல்வேறு விழாக்களை இணைந்து கொண்டாட வலியுறுத்தல்

புதுடெல்லி: டெல்லியில் எம்பிக்களுக்கான 25 மாடிகள் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்களை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். இக்குடியிருப்பை சுத்தமாக வைத்திருக்க வலியுறுத்திய மோடி, பல்வேறு விழாக்களை எம்பிக்கள் ஒன்றாக இணைந்து கொண்டாட கேட்டுக் கொண்டார்.டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு அருகில் உள்ள பாபா கரக் சிங் மார்க்கில் எம்பிக்களுக்காக 25 மாடிகள் கொண்ட 4 அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன. மொத்தம் 184 வீடுகள் கொண்ட இந்த அடுக்குமாடி கட்டிடங்களை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:

இந்த 4 கட்டிடங்களுக்கும் கோசி, கிருஷ்ணா, கோதாவரி, ஹூக்ளி என நதிகளின் பெயர்கள் சூட்டப்பட்டன. இதில் கோசியை, சின்ன புத்தி கொண்ட சிலர் வரவிருக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தலுடன் தொடர்புபடுத்தலாம். ஆனால் நதிகள் பல கோடி மக்களுக்கு உயிர் கொடுப்பவை. இவை இப்போது மக்கள் பிரதிநிதிகளின் வாழ்க்கையிலும் புதிய மகிழ்ச்சியை கொண்டு வரும். கடந்த 2004 முதல் 2014 வரை எம்பிக்களுக்காக எந்த குடியிருப்பும் கட்டப்படவில்லை. இதனால் முதல் முறை எம்பியாகும் நபர்கள் டெல்லியில் குடியிருப்பின்றி அவதிப்பட்டனர். ஏற்கனவே உள்ள எம்பிக்களின் வீடுகளும் மோசமான நிலையில் இருந்தன. அவை பல சிக்கல்களை ஏற்படுத்தின. தற்போது இந்த பிரச்னை தீர்க்கப்பட்டுள்ளது. 5000 சதுர அடி பரப்பளவில் அனைவருக்கும் வசதியான வீடு கட்டித்தரப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிக்கள் இனி மக்கள் பிரச்னையில் தங்கள் நேரத்தையும் சக்தியையும் இன்னும் திறம்பட பயன்படுத்த முடியும். பழைய வீடுகளைப் பராமரிப்பதில் அரசு கணிசமான தொகையைச் செலவிட்டதால், இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பணத்தை மிச்சப்படுத்தும்.

இந்த வளாகத்தை எம்பிக்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். இந்த 4 கட்டிடங்களுக்கு இடையே தூய்மை போட்டியும் நடத்த முடிவு செய்துள்ளோம். மேலும் இங்கு எம்பிக்கள் பல்வேறு விழாக்களை ஒன்றாக இணைந்து கொண்டாட வேண்டுமென வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார். இந்த புதிய குடியிருப்பில் ஒவ்வொரு வீடுகளும் 5,000 சதுர அடியில் 5 படுக்கை அறை கொண்ட ப்ளாட்களாக கட்டப்பட்டுள்ளன. பெரிய உணவருந்தும் வசதியுடன் கூடிய சமையலறை, விருந்தினர் உபசரிப்பு அறை, எம்பி அலுவலக அறை, விருந்தினர் தங்கும் அறை ஆகியவை உள்ளன. 200 வாகனங்களை வளாகத்தில் நிறுத்தலாம். வளாகத்திலேயே உடற்பயிற்சி கூடம், நடைபயிற்சி செய்ய சிறிய பூங்கா அமைக்கப்பட்டுள்ளன.