Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

புச்சிபாபு கிரிக்கெட்: மீண்டும் ஐதராபாத் சாம்பியன்

சென்னை: அகில இந்திய புச்சிபாபு 4 நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ஆக.18ம் தேதி சென்னையில் தொடங்கியது. தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்(டிஎன்சிஏ) நடத்திய இந்தப் போட்டியில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டத்துக்கு டிஎன்சிஏ தலைவர் 11, நடப்பு சாம்பியன் ஐதராபாத் அணிகள் தகுதிப் பெற்றன. முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி முதல் இன்னிங்சில் 376ரன் எடுத்தது. அந்த அணியின் ஹிமா தேஜா 97, அமன் ராவ் 85, வருண் கவுட் 67ரன் எடுத்தனர். டிஎன்சிஏ வீரர்கள் வித்யூத் 4, ஹேமசுதேசன், திரிலோக் நாக் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

அதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய டிஎன்சிஏ அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ராதாகிருஷ்ணன் 98, விமல் குமார் 54ரன் குவித்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். அடுத்து வந்தவர்களில் அஜிதேஷ் 57, இந்தரஜித் 50ரன் எடுத்து ஸ்கோர் உயர உதவினர். மற்றவர்கள் குறைந்த ரன்னில் ஆட்டமிழந்தனர். அதனால் டிஎன்சிஏ முதல் இன்னிங்ஸ் 353ரன்னில் முடிவுக்கு வந்தது. ஐதராபாத் தரப்பில் நிதின்சாய் யாதவ் , ரோகித் ராயுடு, அனிகேத் ரெட்டி 2 விக்கெட் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்சில் டிஎன்சிஏ 23ரன் தங்கியதுமே ஐதராபாத் பட்டம் வெல்வது உறுதியானது. தொடர்ந்து ஐதராபாத் 2வது இன்னிங்சை விளையாடியது. கடைசி நாளான நேற்று ஐதராபாத் 5 விக்கெட் இழப்புக்கு 155ரன் எடுத்திருந்த போது ஆட்டத்தை சமனில் முடித்துக்கொள்ள 2 அணிகளும் ஒப்புக் கொண்டன. ஆட்டம் டிரா ஆனாலும் முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலை காரணமாக நடப்பு சாம்பியன் மீண்டும் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது. வெற்றிப் பெற்ற அணிக்க கோப்பையுடன் ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் 2வது இடம் பிடித்த டிஎன்சிஏ தலைவர் அணிக்கு 2லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.