‘ப்ரோ கோட்’ தலைப்பை பயன்படுத்த தடை; நடிகர் ரவி மோகனின் படத்திற்கு திடீர் சிக்கல்: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
புதுடெல்லி: மதுபான நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் ரவி மோகன் தயாரிக்கும் புதிய திரைப்படத்தின் தலைப்புக்கு டெல்லி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பிரபல தமிழ் நடிகர் ரவி மோகன் தனது ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ சார்பில் தயாரித்து, கார்த்திக் யோகி இயக்கத்தில் அவரே, எஸ்.ஜே.சூர்யா, அர்ஜூன் அசோகன் உள்ளிட்டோருடன் இணைந்து நடிக்கும் புதிய படத்திற்கு ‘ப்ரோ கோட்’ என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. இந்த தலைப்புக்கு எதிராக, இதே பெயரில் மதுபானம் தயாரித்து வரும் ‘இண்டோஸ்பிரிட் பெவரேஜஸ்’ என்ற நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. முன்னதாக இந்த விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ரவி மோகனுக்கு சாதகமாக உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்த நிலையில், மதுபான நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வணிகச்சின்ன மீறல் தொடர்பாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை நேற்று (அக். 27) விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி தேஜஸ் கரியா, படத்தின் தலைப்புக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். மனுதாரர் தரப்பில், ‘கடந்த 2015ம் ஆண்டு முதல் ‘ப்ரோ கோட்’ என்ற வணிகப் பெயரில் தங்களது நிறுவனம் மதுபானத்தை விற்பனை செய்து வருகிறது. இது மக்களிடையே பெரும் புகழ் பெற்ற வணிகச்சின்னமாக உள்ளது. இந்நிலையில், இதே பெயரை திரைப்படத்திற்கு வைப்பது தங்களது வணிகச்சின்னத்தை மீறும் செயல். எங்களது வர்த்தகப் பெயரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும்’ என வாதிடப்பட்டது.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ‘ஒரே மாதிரியான வணிகச்சின்னத்தை பயன்படுத்துவது முதல் பார்வையிலேயே விதிமீறலாகத் தெரிகிறது. இது நுகர்வோர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது’ எனக் கூறி, வழக்கு முடியும் வரை திரைப்படத்தின் விளம்பரங்களுக்கோ அல்லது வெளியீட்டிற்கோ ‘ப்ரோ கோட்’ என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதித்தது. மேலும், இந்த உத்தரவு குறித்து ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனம் நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்கவும், வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 23ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டது.
