Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடிவாளம் அவசியம்

உலகம் முழுவதும் சமூக ஊடகங்களின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டது. எந்த மூலை, முடுக்கில் எது நடந்தாலும் உடனே ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பரவி பரபரப்பை ஏற்படுத்தி விடுகிறது. ஆக்கப்பூர்வமான செய்தியாக இருந்தால் வரவேற்கலாம். ஆனால் ஒரு விஷயம் குறித்தோ, அந்த சம்பவம் குறித்த தெளிவான தகவல்களோ தெரியாமல் சமூக ஊடகங்களில் தான் தோன்றித்தனமாக கருத்துகளை பதிவிட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி விடுகின்றனர். தங்கள் வீடியோ பதிவு அதிக லைக்குளை அள்ளி பார்வையாளர்கள் அதிகரித்தால் தங்களுக்கு பணம் வரும் என்ற ஒரே நோக்கத்தோடு கையில் செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்கள் போன்று செயல்படுகின்றனர். இதனால் சமுதாயத்தில் பல குழப்பங்கள், வழக்குகள், வீண் செலவு, அலைச்சல், அவதூறு ஆகியவற்றை சந்திக்க வேண்டியிருக்கிறது.

நேர்மறை தலைப்பு, செய்திகள் பார்வையாளர்களை கவராது என்பதற்காக எதிர்மறை தலைப்பு மற்றும் கருத்துகளை தாராளமாக பதிவிடுவது அதிகரித்துவிட்டது. இதற்கிடையில் ஏஐ, டீப்பேக் போன்ற தொழில்நுட்ப அசுர வளர்ச்சியை பயன்படுத்தி பல பிரபலங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகின்றனர். பிரபலங்களின் பெயர், புகைப்படம், குரல் போன்றவற்றை தவறாகப் பயன்படுத்தி ஆள்மாறாட்டம் செய்வது, அங்கீகாரமின்றி வணிகப் பொருட்களில் பயன்படுத்துவது போன்றவை அதிகரித்து வருகின்றன. இந்த சூழலில், பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது கணவரான நடிகர் அபிஷேக் பச்சன், திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்கள், தங்களின் ‘தனிநபர் உரிமைகளை’ பாதுகாக்கக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்தியாவில் ‘தனிநபர் உரிமைகளை’ பாதுகாக்க வலுவான சட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் உள்ள தனி உரிமை மற்றும் அறிவுசார் சொத்துரிமை சட்டங்களைப் பயன்படுத்தி நீதிமன்றங்கள் பிரபலங்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றன. குழந்தைகள் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பிய யூடியூபர் மீது ஆந்திராவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வீடியோக்களை கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வெளியிடுவதற்கு நடிகர் சாய் தரம்தேஜா கண்டனம் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள் ஒரு தவிர்க்க முடியாத தீமை என்று அவர் குறிப்பிட்டு தனது வருத்தத்தை பதிவு செய்துள்ளார். சமூக ஊடகங்கள் குழந்தைகள், பாமரர்கள் மத்தியில் மட்டுமல்ல படித்தவர்களே நம்பும்படி பல அவதூறுகளை பரப்பி அனைவரையும் முட்டாளாக்கி விடுகிறது.

இளைஞர்கள் உள்பட அனைவரும் சமூக ஊடகங்களில் மூழ்கி கிடப்பதால் நம்பிக்கைக்குரிய பத்திரிகைகளை படித்து அவர்கள் தங்களை தெளிவுபடுத்தி கொள்வது குறைந்து விட்டது. சமூக ஊடகங்களுக்கு கடிவாளம் போட வேண்டிய அவசியம் நெருங்கிவிட்டது. பத்திரிகைகளுக்கு எப்படி பதிவு செய்வது கட்டாயமோ, அதுபோன்று சமூக ஊடகங்களில் ஒருவர் வெப்சைட், யூடியூப் சேனல் தொடங்க சட்டரீதியாக பதிவு செய்து உரிமம் பெற வேண்டும் என்று ஒன்றிய அரசு சட்டம் கொண்டுவர வேண்டும். அப்போது சமூக ஊடக போலிகள் தானாக உதிர்ந்துவிடும். பதிவு செய்யப்பட்ட வெப்சைட் அல்லது யூடியூப் சேனலுக்கு சமூக பொறுப்பு அதிகரித்துவிடுவதால் அவர்கள் கவனமுடன் செய்திகளை அலசி, ஆராய்ந்து வெளியிடுவார்கள் என்பதே மூத்த பத்திரிகையாளர்கள், சமூக சேவகர்களின் கருத்தாக இருக்கிறது.