செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் விபரீதம்; பழுதாகி நின்ற கார் மீது சொகுசு கார் பயங்கர மோதல்; 2 பேர் பரிதாப சாவு
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே டயர் பஞ்சரானதால் கார் மீது சொகுசு கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். பக்ரீத் பண்டிகையை கொண்டாடி விட்டு துபாய் செல்லும்போது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மல்லியம் ஆணைமலநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜாபர் அலி. இவரது மகன் இய்யாதீன் (38), துபாயில் பணியாற்றி வந்தார். பக்ரீத் பண்டிகையை கொண்டாடுவதற்காக 15 நாட்கள் விடுமுறையில் துபாயில் இருந்து சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று குடும்பத்துடன் பக்ரீத் பண்டிகையை கொண்டாடி விட்டு மீண்டும் துபாய் செல்ல முடிவு செய்திருந்தார். இன்று அதிகாலை, சென்னையில் இருந்து விமானத்தில் செல்ல வேண்டும் என்பதால் நேற்றிரவு மயிலாடுதுறை அடுத்த குத்தாலம் மாதிரிமங்களம் பகுதியை சேர்ந்த சந்துரு (35) என்பவரது வாடகை காரில் இய்யாதீன் சென்னைக்கு புறப்பட்டார். அவருடன் நண்பர்களான அன்வர் சாதிக் (43), ஐயப்பன் (38) ஆகியோரும் வந்தனர்.
இன்று அதிகாலை செங்கல்பட்டு அடுத்த பழவேலி பைபாஸ் சாலையில் கார் வந்தபோது திடீரென டயர் பஞ்சரானது. அதனால் காரை ஓரமாக நிறுத்தி விட்டு டிரைவர் சந்துருவும் இய்யாதீனும் டயரை மாற்றும் பணியில் ஈடுபட்டனர். ஐயப்பனும், ஜாபர்சாதிக்கும் காரில் இருந்து இறங்கி சிறிது தூரம் வாக்கிங் சென்றனர். கார் டிக்கியை திறந்து அதிருந்த ஒரு டயரையும் ஜாக்கியையும் எடுத்து சந்துருவும், இய்யாதீனும் மாற்ற முயன்றனர். அந்த நேரத்தில், அதிவேகமாக வந்த ஒரு கார், கண் இமைக்கும் நேரத்தில் சந்துரு, இய்யாதீன் மீது பயங்கரமாக மோதி விட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அவர்களது காரும் சாலையோரம் கவிழ்ந்தது.
தகவலறிந்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். 2 சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த விபத்தில் ஐய்யப்பன், அன்வர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். துபாய் செல்ல இருந்த நண்பன் மற்றும் டிரைவர் விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


