சேலம்: சேலம் மாவட்டம் இடைப்பாடி பகுதியை சேர்ந்தவர் தமிழரசன். விவசாயியான இவரது நிலம் நெடுஞ்சாலை பகுதியில் இருக்கிறது. இதையடுத்து தனது நிலத்தை அளவீடு செய்து கிரயம் செய்வதற்காக தடையில்லா சான்றிதழ் வாங்குவதற்கு முடிவு செய்தார். இதற்காக சேலம் கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் நில எடுப்பு தனி தாசில்தார் கோவிந்தராஜிடம் (44) விண்ணப்ப மனு கொடுத்தார். தடையில்லா சான்றிதழ் கொடுக்க வேண்டுமானால் ரூ.5 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கண்டிப்புடன் அவர் கூறினார். இந்த பணத்தை இடைப்பாடி தாசில்தார் அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வரும் வெங்கடாசலத்திடம் கொடுக்குமாறு கூறிவிட்டார். அதன்படி, தமிழரசன், ரூ.5 ஆயிரத்தை டிரைவர் வெங்கடாசலத்திடம் கொடுத்தபோது, அங்கிருந்த மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த போலீசார் தாசில்தார் கோவிந்தராஜையும் கைது செய்தனர்.
* திருச்சி பத்திரப்பதிவு இணை பதிவாளர் ஆபீசில் ரெய்டு
திருச்சி கன்டோன்மென்ட் கோர்ட் அருகே மாவட்ட பத்திரப்பதிவு இணை பதிவாளர் அலுவலகம்(1) இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் நேற்று மாலை டிஎஸ்பி மணிகண்டன் தலைமையிலான போலீசார் அந்த அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியபோது, கணக்கில் வராத ரூ.53,500-ஐ பறிமுதல் செய்தனர். விசாரணையில், அலுவலக உதவியாளர் அறிவழகன்(55) என்பவர், முகமது அப்துல் காதர்(52) (1ம் எண் இணை சார்-பதிவாளர், முழு கூடுதல் பொறுப்பு) என்பவருக்காக லஞ்சப்பணம் வாங்கி வைத்திருந்தது தெரியவந்தது.