Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

லஞ்சம் வாங்கியபோது பிடிபட்டதால் ரூ.15,000ஐ காற்றில் பறக்கவிட்டு தப்ப முயன்ற சப்-இன்ஸ்பெக்டர்: ரூ.5,000ஐ அள்ளி சென்ற மக்கள்

புதுடெல்லி: லஞ்சம் வாங்கியபோது பிடிப்பட்டதால் சப்-இன்ஸ்பெக்டர் ரூ.15,000ஐ காற்றில் பறக்கவிட்டு தப்ப முயன்றார். அதில் ரூ.5,000ஐ மக்கள் அள்ளி சென்றனர். மத்திய டெல்லியில் உள்ள ஹவுஸ் காசி காவல் நிலையத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ராகேஷ் குமார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு நபரிடம் பொய் வழக்கு போடமல் இருக்க லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அந்த நபர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார்.

இதையடுத்து, ராகேஷ் குமாரை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் புகார்தாரரிடம் ரசாயன பொடி தடவிய ரூ.15,000ஐ கொடுத்து, அதை ராகேஷ் குமாரிடம் வழங்கும்படி கூறினர். அதன்படி ஹவுஸ் காசி காவல் நிலையத்துக்கு சென்ற புகார்தாரர், உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமாரை வெளியே அழைத்து அவரிடம் ரூ.15,000ஐ கொடுத்தார். பின்னர் அவர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு சிக்னல் கொடுத்தார்.

உடனடியாக அவர்கள் ராகேஷ் குமாரை பிடிக்க விரைந்தனர். இதைப்பார்த்து பதறிப்போன ராகேஷ் குமார் தான் ஒரு பொறியில் சிக்கியிருப்பதை உணர்ந்தார். உடனடியாக ஆதராத்தை அழிக்க முடிவு செய்த அவர் கையில் வைத்திருந்த ரூ.15,000ஐ காற்றில் வீசிவிட்டு ஓட்டம் பிடித்தார். வீசி எறியப்பட்ட ரூபாய் நோட்டுகளை எடுக்க மக்கள் கூட்டம் கூடியது. அவர்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பணத்தை எடுத்தனர்.

லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவர்களை தடுக்க முயன்றனர். இருப்பினும் ரூ.5,000ஐ எடுத்துக் கொண்டு அவர்கள் அங்கிருந்து தப்பினர். ரூ.10,000ஐ லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மீட்டனர். மேலும் தப்பி ஓடிய உதவி சப்-இன்ஸ்பெக்டர் ராகேஷ் குமாரை மடக்கிப்பிடித்தனர். இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.