பெலேம்: பிரேசில் பருவ நிலை மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள பெலேம் நகரில் பருவ நிலை உச்சி மாநாடு கடந்த 10ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடந்தது. இந்த மாநாட்டில், 190-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஒன்றிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பங்கேற்றார்.
பிரேசிலில் நடந்த பருவ நிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டில் பருவ நிலை நீதிக்காகவும்,சமமான கால நிலை நடவடிக்கைக்காகவும் பிரேசிலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பருவ நிலை மாற்றத்தை எதிர் கொள்வதில் பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள் என்ற கொள்கையில் நிலைத்து நிற்க வேண்டும். பாரிஸ் ஒப்பந்தத்தின் இலக்குகளை அடைவதில் பிரேசிலுக்கு இந்தியா ஆதரவளிக்கும்.
பருவ நிலை நடவடிக்கையில் நியாயம் மற்றும் சமத்துவம் அவசியம். பாரிஸ் ஒப்பந்தத்தின் 10 வது ஆண்டு விழாவில் அதன் இலக்குகளை அடைய பிரேசிலுக்கு இந்தியா ஆதரவளிக்கிறது. பெலேமில் நடந்த உச்சி மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்ட முடிவுகளுக்கு இந்தியா வலுவான ஆதரவளிக்கும். பெலேம் மாநாட்டில் சமமான காலநிலை நடவடிக்கைக்கான அர்ப்பணிப்பை இந்தியா வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.


