அரசு சார்பில் மரியாதை; விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானம்: சென்னை பறந்த கண்கள், சிறுநீரகம், இதயம்
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடலுறுப்புகள் தானமாக பெறப்பட்டு விமானத்தில் சென்னை அனுப்பி வைக்கப்பட்டது. பெண்ணின் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள கொல்லங்குளம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார். இவரது மனைவி சந்தியா (29). இவர் நேற்று முன்தினம் டூவீலரில் சென்றபோது, விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். இவரது உடல் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினர் சந்தியாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தனர்.
இதையடுத்து சந்தியாவின் கண்கள், சிறுநீரகம், இதயம், கல்லீரல், கிட்னி உள்ளிட்ட உறுப்புகள் அனைத்தும் பெறப்பட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமானநிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, பின் அங்கிருந்து சென்னைக்கு விமானத்தில் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் அமுதராணி தலைமையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர். டீன் அமுதராணி மற்றும் போலீசார் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அவரது உடல் ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லும் வழியில் இருபுறமும் செவிலியர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தி வழி அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சந்தியாவின் உடல் சொந்த ஊரான கொல்லம்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இது குறித்து டீன் அமுதராணி கூறுகையில், ‘ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது இதுவே முதல்முறையாகும்’ என்றார்.