*கமிஷனர் அறிவுரை
திருமலை : திருப்பதி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்திற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன், கமிஷனர் மவுரியா ஆய்வு நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: ஏழுமலையான் கோயில் பிரமோற்சவத்தின் போது நாடு முழுவதிலும் இருந்து பக்தர்கள் வருவார்கள்.
எனவே திருப்பதி நகரில் தூய்மைக்கு முக்கியத்துவம் அளித்து நகரின் அனைத்துப் பகுதிகளிலும் தேவஸ்தானம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து தூய்மை பணிகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் நடமாடும் பகுதிகளில் அதிக நடமாடும் கழிப்பறைகள் அமைக்கப்பட வேண்டும்.
முக்கிய சந்திப்புகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நடைபாதைகள் பெயிண்ட் அடித்து, சாலையின் டிவைடரில் செடிகள் நட்டு அழகாக்கப்பட வேண்டும். பிரமோற்சவ ஏற்பாடுகள் நகரத்திற்கு வரும் பக்தர்களுக்கு புது அனுபவத்தை தரும் வகையில் அதிகாரிகள் ஒருங்கிணைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இக்கூட்டத்தில் துணை கமிஷனர் அமரியா, டிடிடி கண்காணிப்பு பொறியாளர் சந்திரசேகர், நகராட்சி பொறியாளர் கோமதி, சுகாதார அலுவலர் டாக்டர் யுவா அன்வேஷ், தோட்டக்கலை அலுவலர் ஹரிகிருஷ்ணா, டி.இ.,க்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதனையடுத்து காந்தி பவன் பகுதி மற்றும் அலிபிரி பகுதிகளில் தூய்மை பணிகளை கமிஷனர் மவுரியா ஆய்வு செய்தார். அப்போது காந்தி பவனில் உள்ள ஆழ்துளை கிணறுகளை சரிசெய்து சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று காந்தி பவன் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனை கேட்ட கமிஷனர், கால்வாய்களில் இருந்து குப்பைகளை அகற்றவும், ஆழ்துளை கிணறுகளை சரிசெய்யவும், கழிவுநீர் குழாயை சரிசெய்யவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அலிபிரி பகுதியில் உள்ள கடைகள் சாலையோரத்தில் குப்பைகளை வீசுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.