திருவனந்தபுரம்: வங்கதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் ஊடுருவி உள்ளனர். இவர்களை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து வருகின்றனர். திருவனந்தபுரம் கொச்சுவேளி பகுதியில் வெளிமாநில தொழிலாளிகள் குடியிருப்புகளில் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்களும் தங்கி இருப்பதாக திருவனந்தபுரம் பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் இந்த குடியிருப்புகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ஒரு தொழிலாளியின் செல்போனை பரிசோதித்த போது அதில் வங்கதேசத்தில் எடுத்த பாஸ்போர்ட்டின் நகல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரித்தனர்.
இதில் அவர் வங்கதேசத்தை சேர்ந்த கெர்மி பிரனோப்(29) என தெரியவந்தது. இவரிடம் மேற்குவங்க மாநிலத்தில் எடுத்த போலி ஆதார் அடையாள அட்டை இருந்தது. விசாரணையில் இவர் திருவனந்தபுரத்தில் உள்ள பிரமோஸ் ஏவுகணை மையத்தில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரிந்து வருவதாக கூறினார். அவரை போலீசார் கைது செய்தனர்.