ஆண் நண்பர்களுடன் அதிக நேரம் பேச்சு வீடு புகுந்து இளம்பெண் படுகொலை: கூலிப்படை ஏவி தீர்த்துக்கட்டினாரா?ராணுவ வீரர் மீது பெற்றோர் புகார்
சாயல்குடி: ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே நரிப்பையூர் வெட்டுக்காடு கிராமத்தை சேர்ந்தவர் விஜயகோபால். இவரும், தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடை சேர்ந்த ஜெர்மின் (36) என்பவரும், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். 14 வயதில் மகள், 10 வயதில் மகன் உள்ளனர். விஜயகோபால் உத்தரகாண்ட்டில் எல்லை பாதுகாப்பு துணை ராணுவத்தில் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
கருத்து வேறுபாட்டால், கடந்த 5 ஆண்டுகளாக இருவரும் பிரிந்து வாழ்வதாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு ஜெர்மின், வெட்டுக்காடு வீட்டில் மகன், மகளுடன் சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்து வந்த 2 மர்ம நபர்கள், குழந்தைகள் கண்முன் ஜெர்மினை ஆயுதங்களால் கொடூரமாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர். இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கொலையான ஜெர்மினினின் பெற்றோர், ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷிடம் கொடுத்த புகார் மனுவில், ஜெர்மினியை அவரது கணவர் விஜயகோபால் தான் ஆள் வைத்து கொலை செய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளனர். சாயல்குடி போலீசார் கூறும்போது, ‘‘விசாரணையில் ஜெர்மின் பிற ஆண் நண்பர்களுடன் போனில் அதிகமாக பேசியது தெரிய வந்தது. இதனடிப்படையில் தகாத உறவு விவகாரத்தில் கொலை நடந்ததா என விசாரணை நடக்கிறது. கணவர் ஆட்களை வைத்து கொலை செய்திருக்கலாம் என பெண்ணின் பெற்றோர் கூறிய புகார் அடிப்படையிலும் விசாரணை நடக்கிறது’’ என்றனர்.