காரைக்குடி: தகாத உறவு ஜோடி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், இளம்பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற காதலனை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வருபவர் ராமு (40). இவருக்கும், கணவரை பிரிந்து 2 குழந்தைகளுடன் வாழும் 32 வயது பெண்ணுக்கும் தகாத உறவு ஏற்பட்டது. இருவரும் கணவன், மனைவி போல வாழ்ந்து வந்தனர். இவர்களுடன் பெண்ணின் 2 குழந்தைகளும் இருந்துள்ளனர். இந்நிலையில், தகாத உறவு ஜோடி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது.
நேற்று காலை குழந்தைகள் பள்ளிக்கு சென்ற நிலையில், ராமுவுக்கும் அவரது காதலிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமு, தனது டூவீலரில் இருந்து பெட்ரோலை பிடித்து வீட்டிற்குள் எடுத்து வந்து படுக்கையில் இருந்த பெண் மீது ஊற்றி தீ வைத்து எரித்து கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது. தீக்காயத்துடன் அந்தப் பெண் தப்பி ஓடினார். படுக்கையில் பெட்ரோல் கொட்டியதில் தீப்பற்றி எரிந்தது. பின்னர் வீட்டில் இருந்த பொருட்களும் தீப்பிடித்து எரிந்தன. ஓட்டு வீடு என்பதால் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.
இது குறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின்பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த பெண் காரைக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் 25 சதவீத காயத்துடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை நேற்று இரவு கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.