கோவை: கோவை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனை ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வெறிநாய் கடித்துள்ளது. இதனால், கடந்த 9ம் தேதி சிறுவனின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பெற்றோர் அவனை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர், சிறுவனுக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து, பெற்றோர் சிறுவனை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
உடல்நிலை மோசமடைந்ததால் மேல்சிகிச்சைக்காக கடந்த 10ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் சிறுவன் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இதுகுறித்து மாவட்ட சுகாதார அலுவலர் பாலுசாமி கூறுகையில்,“நாய் கடித்ததை சிறுவன் பல நாட்களாக கூறாமல் இருந்துள்ளான். உடல்நலக் குறைவு ஏற்பட்ட பிறகே மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனால் சிறுவன் உயிரிழந்துள்ளான்” என்றார்.