லண்டன்: இந்தியாவுடனான 3வது டெஸ்டின் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணி, 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. ஏற்கனவே முடிந்த 2 டெஸ்ட்களில், இந்தியா, இங்கிலாந்து அணிகள் தலா ஒரு போட்டியில் வென்றுள்ளன. இந்நிலையில், 3வது டெஸ்ட் போட்டி, லண்டன் லார்ட்ஸ் அரங்கில் கடந்த 10ம் தேதி துவங்கியது.
முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 387 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பின்னர், முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணியும் 387 ரன்னில் ஆட்டமிழந்தது. 3ம் நாள் ஆட்ட நேர கடைசிக் கட்டத்தில் 2வது இன்னிங்சை துவக்கிய இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது. இந்நிலையில், 4ம் நாளான நேற்று, இங்கிலாந்து 2வது இன்னிங்சை தொடர்ந்தது.
இந்திய பந்து வீச்சாளர்களின் கட்டுக்கோப்பான துல்லிய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். 62.1 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி, 192 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4, முகம்மது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா தலா 2, நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.