*2 சவப்பெட்டிகள் வந்ததால் பரபரப்பு
அஞ்சுகிராமம் : அஞ்சுகிராமம் அருகே இறந்தவர் உடலை அடக்கம் செய்வது குறித்து இரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. ஒரு உடலுக்கு 2 சவப்பெட்டிகள் எடுத்து வந்ததால் போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.
அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரத்தைச் சேர்ந்தவர் அன்பழகன்(50) தொழிலாளி. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் அன்பழகன் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரது உடலை அடக்கம் செய்ய மனைவி ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அன்பழகனுக்கு குழந்தை இல்லாததால் அவரது சகோதர, சகோதரிகளும் தனியே உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இருதரப்பினரும் இறந்தவரை அடக்கம் செய்ய ஆளுக்கொரு சவப்பெட்டியை எடுத்து வந்துள்ளனர். இந்த போட்டியால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க எஸ்பி உத்தரவின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு பாதுகாப்பிற்காக அஞ்சுகிராமம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார், கன்னியாகுமரி காவல் நிலைய உதவி ஆய்வாளர் எட்வர்ட் பிரைட் ஆகியோர் தலைமையிலான போலீசார் மற்றும் அதிரடிப்படை போலீசார் குவிக்கப்பட்டனர்.
போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.இதில் மனைவியிடம் அன்பழகன் உடலை ஒப்படைப்பது என முடிவு செய்யப்பட்டது.இடையடுத்து அன்பழகன் உடல் போலீசார் முன்னிலையில் பங்கு கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் சுமார் 5 மணி நேரம் இழுபறியாக நீடித்து வந்த பிரச்னை முடிவுக்கு வந்தது.