புதுடெல்லி: சீன-இந்திய உறவில் எல்லைப் பிரச்னையை பெரிதுபடுத்தாமல், நட்புறவு மற்றும் வர்த்தக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என இந்தியாவிற்கான சீன தூதர் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் சீனா இடையேயான தூதரக உறவுகள் தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்டதன் 76வது ஆண்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இந்தியாவிற்கான சீன தூதர் ஸு ஃபெய்ஹாங், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய கருத்துக்களை முன்வைத்தார்.
அவர் தனது உரையில், ‘சீனா மற்றும் இந்தியா இடையேயான தூதரக உறவுகள் நிறுவப்பட்டு இந்த ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. கடந்த 75 ஆண்டுகளில், உறவில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், நட்புறவே பிரதானமாக வரையறுத்துள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பு, சீன-இந்திய உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. இரு தலைவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்திய தரப்புடன் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம். கடந்த காலங்களில் இருந்து வந்த எல்லைப் பிரச்னை, தற்போதைய சீன-இந்திய உறவுகளை வரையறுக்க அனுமதிக்கக் கூடாது.
குறிப்பிட்ட வேறுபாடுகள் இருதரப்பு ஒத்துழைப்பை பாதிக்கக் கூடாது. இந்த ஆண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, இருதரப்பு வர்த்தகம் 10.4% அதிகரித்து 102 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. திபெத்தில் உள்ள புனித மலை மற்றும் ஏரிக்கு இந்திய யாத்ரீகர்கள் பயணம் மேற்கொள்வதை சீனா மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி வரை, 2 லட்சத்து 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசாக்கள் இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன’ என்றார்.
கடந்த 75 ஆண்டுகளில், உறவில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தபோதிலும், நட்புறவே பிரதானமாக வரையறுத்துள்ளது. சமீபத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் நடத்திய சந்திப்பு, சீன-இந்திய உறவுகளை புதிய கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.