எல்லைகளாலும், கலாச்சாரங்களாலும் இணைந்துள்ளன இந்தியா - பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்: பிரதமர் மோடி அழைப்பு
திம்பு: இந்தியா பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக பூடான் நேற்று சென்றார். பூடான் தலைநகர் திம்புவில் உள்ள சாங்லிமெதாங் திடலில் நடந்த பூடானின் மன்னர் யே டபிள்யூ ஜிக்சேமே-வின் 70வது பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “உலகம் ஒரே குடும்பம் என்பதை எடுத்துரைக்கும் வசுதைவ குடும்பகம் என்ற தொன்மை சிந்தனையில் இந்தியா ஊக்கம் பெற்றுள்ளது.
அனைவரும் இன்புற்றிருக்க வேண்டும் என நினைக்கும் இந்தியாவின் மந்திரம் உலகின் மகிழ்ச்சியை வலியுறுத்துகிறது. இந்தியாவும், பூடானும் எல்லைகளால் மட்டுமின்றி, கலாச்சாரத்தாலும் இணைந்துள்ளன. நமது உறவு மாண்புகள், உணர்வுகள், சமாதானம், முன்னேற்றம் ஆகியவற்றுடன் தொடர்புடையவை. இணைப்பு வாய்ப்புகளை உருவாக்குகிறது. வாய்ப்பு செழிப்பை உருவாக்குகிறது.
இந்த இலக்கை மனதில் கொண்டு, வருங்காலத்தில் பூடானின் ஜெலுபு மற்றும் சம்ட்சே நகரங்களை இந்தியாவின் பரந்த ரயில் நெட்வொரக்குடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் பூடான் விவசாயிகள் இந்தியாவின் பரந்த சந்தையை எளிதாக அணுக முடியும். எல்லை உள்கட்டமைப்பில் இருநாடுகளும் வேகமாக முன்னேறி வருகின்றன. இந்தியா பூடான் இடையே எரிசக்தி ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும்” என தெரிவித்தார்.
