*தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்
பூதப்பாண்டி : பூதப்பாண்டி அருகே 200 அடி உயர மலையில் ஏறி நின்று கொத்தனார் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அடுத்துள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகுமார் (43). கொத்தனார். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு மகள் உள்ளனர். இவரது மனைவி டெய்லராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினர் தற்போது எட்டாமடையில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த மணிகுமார் எட்டாமடை பகுதியிலுள்ள சுமார் 200 அடி உயரம் உள்ள ஒரு மலை மீது ஏறினார். பின்னர் அவர் நான் கீழே குதித்து தற்கொலை செய்ய போவதாக கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த கீழே நின்றவர்கள் உடனடியாக நாகர்கோவில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் மணிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் மாற்று வழியாக சென்று மலையில் நின்ற மணிகுமாரை மீட்டு பத்திரமாக கீழே இறக்கினர். பின்னர் அவரை பூதப்பாண்டி காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் ஒப்படைத்தனர். மலை மீது நின்று கொத்தனார் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.