கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தை கண்டித்து நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: கன்னியாகுமரி இளைஞர் கைது
சென்னை: நீலாங்கரையில் உள்ள தவெக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர். சென்னை நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில், கடந்த சில நாட்களாக கரூர் சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், சென்னை காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், ‘நீலாங்கரையில் உள்ள தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது இன்னும் சிறிது நேரத்தில் வெடித்து சிதறும்’ என்றும் கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளார். அதன்பேரில், நீலாங்கரை போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுடன் நடிகர் விஜய் வீட்டுக்கு விரைந்து சென்று, மோப்ப நாய்களின் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர்.
ஆனால், எவ்வித வெடி பொருட்களும் சிக்கவில்லை. இதனால் இந்த மிரட்டல், வெறும் புரளி என போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என விசாரணையில் ஈடுபட்டனர். அதில், கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சபீக் (37) என்பதும், இவர் மீனம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருவதும் தெரிந்தது. அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், ‘‘கரூரில் விஜய் பரப்புரையின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்த அவர், அடுத்து விஜய் கன்னியாகுமரிக்கு வந்தால் இதுபோன்று மீண்டும் நடக்கக்கூடும் எனக் கருதி, இந்த மிரட்டலை விடுத்தது’’ தெரிந்தது. இதையடுத்து, அவரை கைது செய்தனர்.