அண்ணாநகர்: சென்ைன நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் பகுதியில் உள்ள 4 தனியார் பள்ளிகள், ஆவடி பகுதியில் உள்ள 3 தனியார் பள்ளிகள் என 7 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னை நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் ஆகிய பகுதிகளில் பிரபலமான 4 தனியார் பள்ளிகள் உள்ளது. நள்ளிரவு 1.30 மணி அளவில், மின்னஞ்சல் மூலம் மேற்கண்ட பள்ளிகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் கொடுத்த தகவல்படி, நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டுகளை செயலிழக்க செய்யும் இரண்டு குழுவினர் தனித்தனியாக சென்று அதிகாலை முதல் சுமார் 8 மணி நேரம் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்காததால் அது வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது. இதனிடையே 4 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் உடனடியாக பள்ளி நிர்வாகத்துக்கு போன் செய்து விசாரித்துள்ளனர். அதற்கு பள்ளி நிர்வாகம், ‘’வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்றும் வெடிகுண்டு செயலிழக்க செய்யும் நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் வந்து சோதனை செய்துவிட்டனர். எனவே, பயப்பட தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளனர். இருப்பினும் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பல பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பவில்லை என்று தெரிகிறது. நொளம்பூர், ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் உள்ள பிரபல 4 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவம் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி
ஆவடி அருகே பருத்திப்பட்டு, செவ்வாய்பேட்டை மற்றும் பூந்தமல்லி அருகே திருமழிசையில் உள்ள 3 தனியார் பள்ளி நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்துக்கு வெடிகுண்டு நிபுணர்கள் மற்றம் மோப்ப நாய் ஜான்சியுடன் போலீசார் விரைந்து சென்றனர். 3 தனியார் பள்ளிகளின் அனைத்து இடங்களிலும் டிடெக்டர் கருவி உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். மேலும், மோப்ப நாய் ஜான்சி பள்ளி வளாகங்களில் சுற்றி வந்து, வெடிகுண்டுகள் உள்ளனவா என சோதனையில் ஈடுபட்டது. சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனை சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேல் நீடித்தது. சோதனை முடிவில், 7 தனியார் பள்ளிகளிலும் வெடிகுண்டு மிரட்டல் தகவல் வெறும் புரளி என உறுதியானது.