கோவை: கோவை கலெக்டர் அலுவலகத்துக்கு இன்று காலை இ-மெயில் முகவரியில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து மோப்பநாய், மெட்டல் டிடெக்டர் கருவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று காலை ஊழியர்கள் பணி செய்து கொண்டிருந்தனர். அலுவலக இ-மெயில் முகவரியை பார்வையிட்டபோது அதில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு ஒரு மெயில் அனுப்பப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் அளித்ததோடு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் மெட்டல் டிடெக்டர் கருவியுடன் 2 நுழைவாயில் பகுதி, வாகன நிறுத்துமிடம், 4 மாடியில் செயல்பட்டு வரும் புதிய கட்டிடம் மற்றும் பழைய கட்டிடத்தின் ஒவ்வொரு அலுவலக அறையிலும் தீவிர சோதனை நடத்தினர். நீண்ட நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரிய வந்தது. கடந்த ஒரு சில மாதங்களில் மட்டும் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு 3 முறை வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மெயில் முகவரி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.