சென்னை: சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று அதிகாலை ஒரு மர்ம இ-மெயில் வந்தது. அதில், சென்னை விமான நிலையத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. வெடிகுண்டுகள் இன்று (நேற்று) காலை வெடித்து சிதறும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. இதையடுத்து சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விமான நிலைய இயக்குனர் அலுவலகத்திற்கு அவசர தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று அதிகாலை, சென்னை விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில், விமான நிலைய பாதுகாப்பு குழுவின் அவசரக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள், விமான நிறுவன அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு அதிகாரிகள், பிசிஏஎஸ் அதிகாரிகள், மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அதோடு சென்னை விமான நிலையம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் தீவிர வெடிகுண்டு சோதனைகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி நேற்று காலை வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தினர். அதிரடி படையினர், பாதுகாப்பு படையினர் ஆகியோரும் சோதனையில் ஈடுபட்டனர்.இந்த வெடிகுண்டு சோதனைகள் நீண்ட நேரம், சென்னை விமான நிலையத்தில் நடந்தது. ஆனால் சந்தேகப்படும்படியான பொருட்கள் எதுவும் இல்லை. இதையடுத்து இது வழக்கமான புரளி என்று முடிவு செய்யப்பட்டது.


