Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வெடிகுண்டு மிரட்டலால் தாய்லாந்து விமானம் அவசர தரையிறக்கம்; ஏர்போர்ட்டில் விடியவிடிய பரபரப்பு: 176 பயணிகளிடம் 8 மணி நேரம் சோதனை

போரூர்: மும்பையில் இருந்து தாய்லாந்து புறப்பட்ட இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் வெடிகுண்டு புரளியால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. 8 மணி நேர சோதனைக்கு பிறகு அது மீண்டும் தாய்லாந்து புறப்பட்டது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விடிய விடிய பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பையில் இருந்து தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு செல்லும், இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் மாலை மும்பை விமான நிலையத்தில் இருந்து 176 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என 182 பேருடன் புறப்பட்டு, தாய்லாந்து சென்று கொண்டிருந்தது. விமானம் மும்பையில் இருந்து புறப்பட்டு சுமார் 2 மணி நேரத்தில், மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு வந்த ஒரு மர்ம இ-மெயிலில், தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு மும்பையில் இருந்து புறப்பட்டு சென்று கொண்டிருக்கும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தின் கழிவறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் மறைத்து வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை விமான நிலைய அதிகாரிகள், உடனடியாக டெல்லியில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து விமானம், நேற்று முன்தினம் இரவு 7.20 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது. உடனடியாக விமானத்தில் இருந்த 176 பயணிகளும், அவசரமாக விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டனர். அந்த பயணிகள் அனைவரும் சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்பு அந்த விமானம் ரிமோட் பே எனப்படும் விமான நிலையத்தில் ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று நிறுத்தப்பட்டது.

அதோடு சென்னை விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடி படையினர், பாதுகாப்பு அதிகாரிகள் தனியாக நிறுத்தி வைக்கப்பட்ட அந்த விமானத்தை சூழ்ந்து, தீவிர சோதனைகளை நடத்தினர். விமானத்தின் அனைத்து பகுதிகளும் முழுமையாக சோதனைகள் நடந்தன. சுமார் 3 மணி நேரத்துக்கு மேலாக சோதனைகள் நடந்தன. ஆனால், விமானத்தில் இருந்து வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.அதன்பிறகு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி அடிப்படையினர், வெடிகுண்டு நிபுணர்கள், சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டிருந்த அந்த விமானத்தில் வந்த 176 பயணிகளையும் துருவித் துருவி சோதனைகள் நடத்தி

னர். அந்த பயணிகளின் கைப்பை அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்டன. இந்த சோதனைகள் நள்ளிரவை கடந்தும் நடந்து கொண்டு இருந்தன. பின்பு நேற்று அதிகாலை 2 மணிக்கு, அனைத்து சோதனைகளும் நடத்தி முடிக்கப்பட்டன. ஆனால் வெடிகுண்டுகளோ மற்றும் ஆட்சேபகரமான பொருட்களோ எதுவும் கைப்பற்றப்படவில்லை.

எனவே இது வழக்கமான புரளியாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அதன்பின்பு டெல்லியில் உள்ள இந்திய விமான நிலைய ஆணைய கட்டுப்பாட்டு அறைக்கு சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். ஆனாலும் சென்னை விமான நிலையத்தில் உள்ள, பி சி ஏ எஸ் எனப்படும், விமான பாதுகாப்பு பிரிவான, பீரோ ஆப் சிவில் ஏவியேஷன் செக்யூரிட்டி அதிகாரிகள், மீண்டும் ஒருமுறை அந்த விமானத்தை முழுமையாக சோதனை நடத்தினர். பின்பு நேற்று அதிகாலை 3 மணி அளவில், பயணிகள், மீண்டும் விமானத்தில் ஏற்றப்பட்டனர். பிறகு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னை விமான நிலையத்தில் இருந்து, நேற்று அதிகாலை 3.30 மணி அளவில், தாய்லாந்து நாட்டின் புக்கெட் நகருக்கு புறப்பட்டு சென்றது.

இந்த வெடிகுண்டு மிரட்டலால் சென்னை விமான நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7.20 மணியிலிருந்து நேற்று அதிகாலை 3.30 மணி வரையில், சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக, விடிய விடிய சோதனைகள் நடந்து, சென்னை விமான நிலையம் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிரா இளைஞர்கள் இருவரின் பயணம் ரத்து

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடிப்படையினர், நடத்திய சோதனையின் போது, இந்த விமானத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 10 இளைஞர்கள் சுற்றுலாப் பயணிகளாக தாய்லாந்துக்கு செல்ல இருந்தனர். அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் விசாரித்தனர். அப்போது அவர்களில் அஜய் (33) என்ற இளைஞரிடம் இருந்த ஒரு துண்டு சீட்டில் எழுதப்பட்டிருந்த வாசகம் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இளைஞரையும், உடன் வந்திருந்த மற்றொரு இளைஞரையும் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கவில்லை. அவர்கள் இருவர் பயணத்தையும் ரத்து செய்து, இருவரையும் மும்பை போலீசாரிடம் ஒப்படைக்க முடிவு செய்தனர்.