லாகூர்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவச் சென்ற பிரபல பாகிஸ்தான் பாடகி குராத்துலைன், தூக்கத்தில் இருந்த போது கரடி தாக்கியதில் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். பாகிஸ்தான் நாட்டின் பிரபல பாடகியும், கவிஞருமான குராத்துலைன் பலூச், ‘வோ ஹம்சஃபர் தா’ என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர் ஆவார். இவர், பாலிவுட் திரைப்படமான ‘பிங்க்’ படத்தில் ‘காரி காரி’ என்ற பாடலையும் பாடியுள்ளார். இந்நிலையில், ஸ்கர்டுவில் உள்ள தியோசாய் தேசியப் பூங்காவில் கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது, பழுப்பு நிறக் கரடி தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
அவர் அங்கு முகாமிடச் சென்றதாக முதலில் தகவல்கள் பரவிய நிலையில், பாகிஸ்தானின் பல்திஸ்தான் மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு நிவாரணப் பணிகளில் ஈடுபடவே அங்கு சென்றதாக அவரது குழுவினர் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவரது குழுவினர் வெளியிட்ட அறிக்கையில், ‘பேரிடர் மீட்புக் குழுவினருடன் இணைந்து குராத்துலைன் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்தார். அன்று இரவு கூடாரத்தில் உறங்கிக்கொண்டிருந்தபோது அவரை கரடி தாக்கியது.
உடனடியாக மீட்புக் குழுவினர் கரடியை விரட்டியடித்து, படுகாயமடைந்த ேகுராத்துலைனை மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் அபாய கட்டத்தைத் தாண்டி நலமாக உள்ளார். அவரது இரு கைகளிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதே தவிர, எலும்பு முறிவுகள் ஏதுமில்லை. அவர் முழுமையாக குணமடையும் வரை அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தியோசாய் தேசியப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் கூடாரம் அமைத்துத் தங்க கில்கித்-பல்டிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.